டீசல் இல்லாமையினால் இ.போ.சவின் மன்னார் – யாழ்ப்பாணம் மாலை நேர பஸ் சேவை நேற்று திடீர் இடைநிறுத்தம் – அரச, தனியார் துறை ஊழியர்கள் பாதிப்பு

மன்னார் – யாழ்ப்பாணம் இடையேயான பேருந்து சேவை நேற்று மாலை 6 மணிக்கு திடீரென இடைநிறுத்தப்பட்டமைக்கு மன்னார் சாலையில் டீசல் இல்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தலைமை பிராந்திய முகாமையாளர் குணபாலச்செல்வம் தெரிவித்தார்.

மன்னார் சாலையினால் தாமதமாக வழங்கப்பட்ட கொள்வனவுக் கட்டளையினால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் டீசல் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மன்னாரிலிருந்து நேற்று மாலை 5 மணிக்கு சேவையில் ஈடுபடும் கோண்டாவில் சாலைக்குச் சொந்தமான பேருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கள்ளியடியில் தடைப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு பயணித்த அந்தப் பேருந்து நேற்று மாலை 3.30 மணியளவில் கள்ளியடியில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக தடைப்பட்டது.

அதுதொடர்பில் பேருந்து சாரதியினால் உடனடியாக அறிவிக்கப்பட்ட போதும் தொழில்நுட்பவியலாளர்கள் செல்வதில் ஏற்பட்ட தாமதத்தினால் நேற்றிரவு 7.30 மணியளவிலேயே அந்தப் பேருந்து சீரமைக்கப்பட்டது.
அதனால் மன்னாரிலிருந்து நேற்று மாலை 5 மணிக்கு இடம்பெறவிருந்த சேவை தடைப்பட்டது.

இந்த நிலையில் வழமையாக மாலை 6 மணிக்கு சேவையில் ஈடுபடும் மன்னார் சாலைக்குச் சொந்தமான பேருந்தும் இடைநிறுத்தப்பட்டதால் யாழ்ப்பாணத்திலிருந்து பணிக்குச் செல்லும் அரச ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையிலேயே மன்னார் – யாழ்ப்பாணம் இடையேயான பேருந்து சேவை நேற்று மாலை 6 மணிக்கு திடீரென இடைநிறுத்தப்பட்டமைக்கு மன்னார் சாலையில் டீசல் இல்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சாலைக்கு கிடைக்கப் பெற்ற டீசலில் நேற்று ஆயிரம் லீற்றரும் இன்று 2 ஆயிரம் லீற்றரும் மன்னார் சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வடபிராந்திய தலைமை பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.

மன்னார் சாலைக்கான டீசல் இன்று நள்ளிரவு கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.