Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்தமிழர் தாயகத்தின் பழமைவாய்ந்த வாகனங்களின் பவனி நாளை வட்டுக்கோட்டையில்

தமிழர் தாயகத்தின் பழமைவாய்ந்த வாகனங்களின் பவனி நாளை வட்டுக்கோட்டையில்

தமிழர் தாயகத்தில் தற்போதும் பாவனையிலுள்ள பல பத்தாண்டுகளுக்கு முற்பட்ட வாகனங்களின் பவனி நாளை வட்டுக்கோட்டையில் இடம்பெறவுள்ளது.

வரலாற்று புகழ்பூத்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் வார ஆரம்ப நிகழ்வான நடை – வாகன பவனியிலேயே இந்த பழமை வாய்ந்த வாகனங்கள் பவனி வரவுள்ளன.

யாழ்ப்பாணக் கல்லூரியும் அதனது தாய்க் கல்வி நிறுவனமாகிய பற்றிக்கோட்டா செமினரியும் 1823ஆம் ஆண்டு முதல் கடந்த 200 வருடங்களாக‌ வழங்கிய கல்விப் பணியினையும், சமூகப் பணியினையும் நினைவுகொள்ளல் – கொண்டாடுதல் – அவை குறித்துச் சிந்தித்தல் மற்றும் கல்லூரியின் எதிர்காலப் பயணம் குறித்துத் திட்டமிடும் வகையிலுமான‌ பழைய மாணவர் வார நிகழ்வுகள் நாளை (ஜூலை 15) சனிக்கிழமை தொடக்கம் ஜூலை 22ஆம் திகதிவரை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வளாகத்தில் மிகவும் கோலாகலமான முறையிலே இடம்பெறவுள்ளன.

புலம்பெயர் தேசங்கள் முழுவதிலும் இருந்து வருகை தந்துள்ள கல்லூரியின் பழைய மாணவர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.

ஆரம்ப நிகழ்வாகப் பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடை – வாகன பவனி நாளை சனிக்கிழமை (ஜூலை 15) காலை 7 மணிக்குக் கல்லூரி வாசலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.

வட்டுக்கோட்டை சந்தி – கோட்டைக்காடு – அராலி – செட்டியார்மடம் – துணைவி, நவாலி – ஆனைக்கோட்டை – மானிப்பாய் – சண்டிலிப்பாய் – பண்டத்தரிப்பு -சித்தங்கேணி – வட்டுகோட்டை வழியாக யாழ்ப்பாணக் கல்லூரியினை பவனி வந்தடையும்.

சித்தன்கேணி சந்தியிலிருந்து வட்டுக்கோட்டை சந்தி வரை தமிழர் தாயகத்தில் தற்போதும் பாவனையிலுள்ள பல பத்தாண்டுகளுக்கு முற்பட்ட வாகனங்களின் பவனி இடம்பெறவுள்ளது.

அவற்றுடன் மாட்டு வண்டிகளும் பவனி வரவுள்ளன.

இந்த நடை – வாகன பவனியில் கலந்துகொள்ளுமாறு பழைய மாணவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகளுக்கு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular