தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்படவேண்டும்- வடக்கு – கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்து

0
Credit: AFP via Getty Images

“தமிழ் மக்களின் உரிமை பயணத்தில் ஒற்றுமையான வழிநடத்தலை அளிக்க இணைந்து கொண்ட தமிழ்க் கட்சிகள் இன்னும் பலமடையவேண்டும். அதுபோன்று ஏனைய தமிழ்க் கட்சிகளும் ஒரே குடையின் கீழ் இணைந்து செயற்பட வேண்டும்” என்று வடக்கு – கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் இந்த விடயத்தில் கலந்துரையாடலை நடாத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயர்களின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தியாக தீபம் தீலிபனின் நினைவு வாரத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பல நினைவேந்தல் நினைவுகள் பொலிஸாரால் நீதிமன்றங்களின் ஊடாக பெற்றுக் கொண்ட தடை உத்தரவுகளினால் நீர்த்துப் போக செய்யப்பட்டுள்ள செய்திகளை பத்திரிகைகளின் ஊடாக அறிந்து தமிழ் மக்களுக்கு விடிவு காலமே வராதா என்று சிந்தித்த வேளையில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நினைவேந்தல் செய்வது எங்கள் உரிமை என்றும் அதை தடை செய்வதை நிறுத்தவேண்டும் என்றும் ஜனாதிபதிக்கும் பிரமதமருக்கும் மனு அனுப்பியுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகின்றோம்.

தமிழ்க் மக்களை பிரதிநிதத்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாகிய இணைந்து கொண்டமைக்கு எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தமிழ் மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்பது காலத்தின் தேவையும் வரலாற்றுக் கடமையும் ஆகும் என்பதை உணர்ந்து செயற்பட்டுள்ளமைக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள்.

அரசு உங்களது கோரிக்கையை ஏற்காதுவிட்டாலும் அதன் மாற்று நடவடிக்கையை சாத்வீக முறையில் நடாத்தி, அது நியாயமான உரிமை கோரிக்கையாக அமைய மக்களும் இணைந்து கொண்டார்கள். இந்த உரிமைக் கோரிக்கைகளில் உங்களிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் நிலவும் என்றும் தமிழ் மக்களின் உரிமை பயணத்தில் ஒற்றுமையான வழிநடத்தலை அளிக்க இணைந்து கொண்ட நீங்களும் இன்னும் இணையவிருக்கும் கட்சிகளும் ஒரே குடையின் கீழ் வருவீர்கள் – வரவேண்டும் என்றும் மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் விரைவில் மாகாகண சபைத் தேர்தல் நடைபெறும் என்ற செய்தியும் உள்ளது. மகாண சபைத் தேர்தலில் எமது வட கிழக்கு மாகாணங்கள் மிக மிக கவனத்தில் எடுக்கப்படவேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுடைய குடிப்பரம்பல் திட்டமிட்டு உடைக்கப்பட்டு பிரநிநிதித்துவம் குறைக்கப்படுகிறதை காண்கின்றோம்.

நடந்தோறிய நாடாளுமன்ற தேர்தலில் வடக்கில் வாக்கு குறைந்தது. அம்பாறை மாவட்டத்தில் பிரதிநித்துவத்தை இழந்தோம். திருகோணமலையில் நலிந்த நிலையில் தக்கவைத்தோம் மாகாண சபை தமிழர் தலைமையில் இருக்கவேண்டுமாயின் வட கிழக்கு மாகாண யாதார்த்தத்தை புரிந்தவர்களாகவும் எல்லோரும் ஒற்றுமைப்பட்டவர்களாகவும் களம் இறங்கவேண்டும்.

இதுவும் எமது வரலாற்றுக் கடமை என்பதை உணர்ந்தவர்களாக செயற்படவேண்டும். தேவைப்பட்டால் இது பற்றி களமிறங்கப்போகின்ற அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவும் எண்ணியுள்ளோம். இக்கட்டான அந்த அரசியல் சூழலில் மக்களை வழிடத்த பொறுப்புக்களை ஏற்றுள்ள உங்களை இறைவனின் ஞானமும் அருளும் வழிநடத்த பிரார்த்திக்கின்றோம் – என்றுள்ளது.