தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளை வழங்கவேண்டும் – மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய வெட்டுப்புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை வகுக்க கல்வி அமைச்சுக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதியரசர்கள் ருவன் பெர்னாண்டோ, சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

கடந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 10 மாணவர்களின் பெற்றோர்களினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தரம் ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்த போதிலும், தமது பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிக்கும் முறைமையை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.