திங்கள் தொடக்கம் திட்டமிட்டபடி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும்

நாளைமறுதினம் திங்கட்கிழமை (ஜூலை 25) தொடக்கம் பாடசாலைகள் திட்டமிட்டம்படி வாரத்தில் 3 நாள்கள் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் இன்றைய தினம் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட கல்வி அதிகாரிகள், உதவி கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அதிபர்களுக்கும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட பணிப்புரையின் பிரகாரம் 19.07.2022 அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்புக்கு அமைய பாடசாலைகள் இடம்பெறும்.

அரசு மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் 25 ஜூலை 2022 திங்கட்கிழமை தொடக்கம் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாள்களில் பாடசாலைகள் மறு அறிவிப்பு வரும் வரை இடம்பெறும்.

புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றலில் ஈடுபட அனுமதிக்கப்படும்.

அல்லது இணையவழிக் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம் – என்றுள்ளது.