தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேட்டர் டயர் உற்பத்தி ஆலையான “ஃபெரெண்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ நிறுவனம் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஹொரன வகவத்த முதலீட்டுச் சபை கைத்தொழில் வலயத்திற்கு சொந்தமான 155 ஏக்கர் நிலத்தில் இந்த கைத்தொழில் வளாகம் அமைந்துள்ளது.
முதல் கட்டத்திற்கான முதலீடு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் உலகின் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

SUV வாகனங்கள், மோட்டார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல உலகத் தரம் வாய்ந்த டயர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறன. 80 சதவீத உற்பத்தி ஏற்றுமதி செய்யப்படுவதுடன், மீதமுள்ள 20 சதவீத உள்ளூர் சந்தைக்கு வழங்கப்படுகிறது.
நிறுவனத்தின் முதல் தொகுதி உற்பத்தி இந்த மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்சாலையின் நன்மைகளில், நாட்டின் ஏற்றுமதி சந்தை அபிவிருத்தி, ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உள்ளூர் இறப்பர் செய்கையாளர்களுக்கு கிடைக்கும் அதிக விலைகள் ஆகியவை அடங்கும்.
உற்பத்தித் துறையின் நிலையான எல்லைகளை கடந்து, தொழில்நுட்பத் துறை பதவிகளுக்கு தகுதியான பெண்களை நியமிக்க நிறுவனத்தின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழிற்சாலை வளாகம் சூழல் நட்புடையதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியக ஃபெரெண்டினோ டயர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் நந்தன லொகுவிதான வரவேற்றார்.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி, டயர் உற்பத்தி நிறுவனத்தின் முழு செயல்முறையையும் பார்வையிட்டார்.
கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகள் பெற்ற இங்கிரிய சுமனஜோதி வித்தியாலயத்தின் மாணவி யசஸ்மி தெவ்மிக்கு ஜனாதிபதி அன்பளிப்பொன்றை வழங்கினார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் சங்கைக்குரிய இத்தேபானே ஸ்ரீ தம்மாலங்கார தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர்களான விமல் வீரவங்ச, ரோஹித அபேகுணவர்தன, மகிந்த அமரவீர, ரமேஷ் பதிரண, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, கனக ஹேரத், டீ.வீ. சானக, பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.