நல்லூரானை தரிசிக்க செல்லும் அடியவர்கள் நகைகள், பணத்தை தவிர்ப்பதே நல்லது – பொலிஸார்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் பகங்கேற்கும் அடியவர்கள் தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், வீட்டில் ஒருவராவது தங்கியிருப்பதுடன் அல்லது பாதுகாப்பாக வீட்டை மூடி ஆலயத்துக்குச் செல்லுவமாறு யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 25 நாள்கள் திருவிழா மற்றும் திருக்கல்யாணம், வைரவர் சாந்தி என 27 நாள்கள் ஆலயத்தில் அடியவர்கள் பெரும்திரளாகப் பங்கேற்பர்.

வழமைபோன்று சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

எனினும் திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்கள் தமது தங்க நகைகள் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.

இயன்றளவும் நகைகளை அணிவதைக் குறைப்பதுடன் பணத்தை எடுத்துவருவதைத் தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.