நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடினால் 15 மணிநேர மின்வெட்டு, தனியார் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும்

இலங்கை அரசு எரிபொருளை வழங்கத் தவறினால், மின்வெட்டு நேரத்தை நாளொன்றுக்கு 15 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படலாம் மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் தடைப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனல் மின் நிலையங்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு 800 மெகாவாட் மின்சாரத்தை இழந்ததால், தினசரி மின்வெட்டு காலம் நாளை வியாழக்கிழமை 13 மணிநேரமாக அதிகரித்துள்ளது.

வறட்சி இலங்கையின் நீர் மின் உற்பத்தித் திறனைக் குறைத்துள்ளது. அதே வேளையில் கடுமையான டொலர் தட்டுப்பாடு நாட்டின் மின் உற்பத்திக்கான எரிபொருள் இருப்புக்களை சரியான நேரத்தில் இறக்குமதி செய்வதை உறுதி செய்யும் திறனை பாதித்துள்ளது.

வியாழன் வரை மின்சார உற்பத்தி மற்றும் தனியார் வாகனங்களின் நுகர்வு ஆகிய இரண்டிற்கும் டீசல் கிடையாது என இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

“இந்த சூழ்நிலைகள் காரணமாக ஒரு நாளைக்கு 13 அல்லது 15 மணிநேரங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படலாம்” என்று இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இன்று கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாடு தொடரும் மற்றும் நாட்டில் மழை பெய்யாத பட்சத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் புத்தாண்டின் போது நாடு இருளில் மூழ்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்கள் குறைந்துவிட்டன. மேலும் நாடு முக்கியமாக எரிபொருளுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியக் கடன் உதவியை நம்பியுள்ளது.

விவரிக்க முடியாத உயர்வு

ஒரு வருடத்தில் எரிபொருள் நுகர்வு கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இன்று தெரிவித்தார்.

2021 ஜனவரியில் மொத்த எரிபொருள் நுகர்வு மின் உற்பத்திக்கான டீசல் உள்பட 39,000 மெட்ரிக் டன்னாக இருந்தது. 2022 ஜனவரியில் அது 180,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

“கடந்த இரண்டு வருடங்களில் வாகனம் இறக்குமதி செய்யப்படாததால் எரிபொருள் நுகர்வு எவ்வாறு அதிகரிப்பது? என்று விசாரிக்க வேண்டும்.

நேற்று செவ்வாய்க்கிழமை (29) மின் உற்பத்தி மற்றும் பொது நுகர்வுக்கு டீசல் வழங்கப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கடுமையான யதார்த்தம்

நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 27 வீதமாக குறைந்துள்ளதாகவும், அதனை குடிதண்ணீருக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

அடுத்த ஐந்து மாதங்களில் இலங்கைக்கு நிலக்கரி இருப்பை பாதுகாக்க முடியாவிட்டால் மின் நெருக்கடி மேலும் நீடிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் போதுமான நிலக்கரியைப் பெறவில்லை மற்றும் கடந்த 4 நிலக்கரி இருப்புகளுக்கு, அந்நிய செலாவணி பிரச்சினை காரணமாக நாங்கள் பணம் செலுத்தவில்லை” என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரதநாயக்க கூறினார்.

“ஓஃப் சீசனில் நிலக்கரியை இறக்குவது கடினமாக இருக்கும். அது நடந்தால், இன்னும் 5-6 மாதங்களில் இப்போது இருப்பதை விட மிகப் பெரிய பிரச்சினையில் சிக்கிவிடுவோம்.

மின்வெட்டு மேலும் நீட்டிக்கப்படுமானால், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையக்கூடும். மின்வெட்டுகளின் போது அனைத்து துறைகளும் செயல்பாடுகளை கையகப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படும்” என்றும் ஜனக ரதநாயக்க கூறினார்.

“எங்களுக்கு எரிபொருள் கிடைத்தாலும், மழைக்காலம் வரும் வரை, இந்த மின்வெட்டை எதிர்கொள்வோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிக மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்யாவிட்டால், அது இப்போது இருப்பதை விட மோசமாக இருக்கும்.” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆபத்தில் தனியார் போக்குவரத்து

எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைக்காவிடின், நாடுமுழுவதும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள் அடுத்த வாரம் சேவையில் இருந்து விலகிக் கொள்வார்கள் என தனியார் போக்குவரத்து சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டீசல் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

“எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று நாங்கள் அரசை கேட்டுக்கொள்கிறோம். அடுத்த வாரத்திற்குள் இந்த பிரச்சினைகளுக்கு பதிலளிக்கப்படாவிட்டால், நாங்கள் ஏற்கனவே மற்ற சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளோம். மேலும் அனைத்து போக்குவரத்து சேவைகளிலிருந்தும் நாங்கள் விலகுவோம்.” என்று அவர் கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வெள்ளிக்கிழமை முதல் பாடசாலை போக்குவரத்தில் இருந்து விலகுமாறு இலங்கையின் மாவட்டங்களுக்கிடையிலான பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் எச்சரித்துள்ளது.

“இந்த நாள்களில் நாங்கள் சேவைகளை வழங்குவதில் சிரமப்படுகிறோம். பரீட்சை நாள்கள் வரவிருப்பதாலும், மாணவர்களின் நலனுக்காக நாங்கள் இப்போது சேவையில் ஈடுபடுகிறோம், ”என்று சங்கத்தின் தலைவர் என்.எம்.கே ஹரிச்சந்திர பத்மசிறி கூறினார்.

“நாங்கள் அதிகாரிகளுடன் பேச முயற்சித்தோம், ஆனால் எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. இந்த வெள்ளிக்கிழமை முதல் எங்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் சேவைகளில் இருந்து விலகுவோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.