நாட்டு மக்களின் நம்பி்க்கையைப் பெறும் பிரதமர், அமைச்சரவையை இந்த வாரம் நியமிப்பேன் – ஜனாதிபதி

இந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையையும் நாட்டு மக்களின் நம்பிக்கையையும் பெறும் வகையில் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றும் சிறப்பு உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்குமாறு தமக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், நாட்டை உறுதிப்படுத்தியதன் பின்னர் புதிய அரசு அனைவருடனும் பேச்சு நடத்த சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.


புதிய இடைக்கால அரசை நியமிப்பதற்கு வசதியாக கடந்த சில நாள்களில் பல தீர்மானங்களை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.


19ஆவது திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில், நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கோத்தாபய ராஜபக்ச கூறினார்.