நீதிச் சேவைக்குள் இணைய தமிழ் சட்டத்தரணிகள் முன்வருவார்களா?

செய்தி – நீதிச் சேவை அதிகாரிகளாக 19 சட்டத்தரணிகள் நியமனம் – தமிழர் ஒருவர்கூட இல்லை

டவுட் வாணர் – தமிழ் சட்டத்தரணிகளில் பெரும்பாலானோர். அரசியல் களத்தில் நேரடியாகவோ அல்லது கட்சி சார்பாகவோ இறங்கிவிடுகின்றனர்.

அத்துடன், அரச துறையிலோ அல்லது தனியார் துறையிலோ துறைசார் உயர் பதவிகளில் பணியாற்ற அவர்கள் விரும்புவதில்லை.

அதனால் தமிழர் தாயகத்திலிருந்து சட்ட மா அதிபர் திணைக்களத்துக்குள்ளோ அல்லது நீதிச் சேவைக்குள்ளோ இணைவதற்கு சட்டத்தரணிகள் அதிகம் அக்கறை காட்டுவதில்லை.

சட்ட மா அதிபர் திணைக்களத்துக்குள் இணைந்து பணியாற்றினால் சட்டதுறை மற்றும் நீதித்துறை சார்ந்த அறிவை அனுபவ ரீதியாகப் பெற்றுவிடலாம் என அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்ற அச்சல வெங்கப்புலி தெரிவித்திருந்தார்.

மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் நீதியரசராகவும் தான் பதவி உயர்வு பெற்றமைக்கு சட்ட மா திணைக்களத்தில் இணைந்தமையே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் தமிழர் தாயகத்தில் சட்டத்தரணிகள், சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இணையவோ நீதிச் சேவைக்குள் இணையவோ அதிகம் அக்கறை கொள்வதில்லை. அதனை இளம் சட்டத்தரணிகளும் விரும்புவதில்லை.

நீதிச் சேவைக்குள் இணையும் இலச்சியத்துடன் சட்டத்தரணியாக வரும் பலர், அதனை அடைய விடா முயற்சி எடுத்தாலும் சிலரின் அநாமதேய கடிதங்கள் பாழாக்கிவிடும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தமிழர் தாயகத்தில் உள்ளனர்.

இந்த நிலை நீடிக்குமாயின் தமிழர் தாயக நீதிமன்றங்களில் பெரும்பாண்மையின நீதிபதிகளும் அரச சட்டவாதிகளுமே எதிர்காலத்தில் நியமிக்கப்படுவர். அதற்கான வழியை நாமே ஏற்படுத்துகின்றோம்.

அவ்வாறு நியமிக்கப்பட்ட பின்னர் நாம் போர்க்கொடி தூக்குவதில் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.

எனவே சட்ட மா அதிபர் திணைக்களத்துக்குள்ளேயோ நீதிச் சேவைக்குள்ளேயோ இணைய முயற்சி எடுப்போருக்கு ஏனையோர் ஊக்கமளிப்பதுவே எமது இனத்துக்கு நன்மையளிக்கும். மாறாக அவர்களின் முயற்சியைத் தடுக்கும் செயற்பாடுகளை நாம் கையிலெடுத்தால் சிங்கள மொழியில் வழக்கு நடத்தும் சூழ்நிலை வடக்கு – கிழக்கில் ஏற்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here