நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 2 நாள்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று அனுமதியளித்தது.
“சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட சில சான்றுப்பொருள்களை நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்று மீட்க்கப்படவேண்டும் மற்றும் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள பொலிஸ் தடுப்பில் வைத்திருக்க யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் முன்வைத்த விண்ணப்பத்துக்கு அமைய 2 நாள்கள் அனுமதியளித்த மன்று நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மன்றில் முற்படுத்த உத்தரவிட்டது.
நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
100 வயது மூதாட்டி ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுல செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவில் நடமாடிவிட்டு நேற்றுக் காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றிரவு கைது செய்தனர்.
ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து அதிகளவு தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன.
அதுதொடர்பில் விசாரணை மேற்கொண்ட போதே சந்தேக நபர் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
சந்தேக நபர் இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதன்போது சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்தி கத்தி உள்ளிட்ட சான்றுப்பொருள்கள் மீட்கப்படவேண்டும் என்பதுடன் மேலதிக தகவல்களை பெறவேண்டும் என்பதனால் ஒரு வாரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்திருக்க அனுமதி கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.
விண்ணப்பத்தை ஆராய்ந்த மன்று இரண்டு நாள்கள் அனுமதியளித்ததுடன், சந்தேக நபரை நாளைமறுதினம் மன்றில் முற்படுத்த உத்தரவிட்டது.
இதேவேளை, ஊர்காவற்றுறை பொலிஸாரின் அசமந்தத்தினால் சந்தேக நபரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்று யாழ்ப்பாணம் மாவட்ட மூத்த பொலிஸ் அதிகாரி கவலை வெளியிட்டார்.
எனினும் புங்குடுதீவு இளைஞர்களின் முயற்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவான தமிழ் பொலிஸ் குழுவின் துரித முயற்சியினால் கொலைச் சம்பவம் நடைபெற்று 24 மணிநேரத்துக்குள் கொலையாளியை கைது செய்ய முற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் தமிழ் பொலிஸ் அதிகாரிகள், தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னின்று துரித விசாரணைகளை முன்னெடுப்பதை பொலிஸ் தலைமையகம் உள்ளிட்ட பொலிஸ் உயர்மட்டம் வரவேற்பதாகவும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரி பாராட்டினார்.