நெடுந்தூர பஸ் நிலைய இடமாற்றத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பாரா யாழ்.மாநகர முதல்வர்

-யாழவன்-

யாழ்ப்பாணத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் நெடுந்நூர பேருந்து சேவைகளை இடமாற்றுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது . இதுவரை இயங்கி வந்த யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையமானது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் இருந்தது அனைவரும் அறிந்ததே.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நெடுந்தூர தனியார் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்துக்கு சுழவுள்ள பகுதியைப் பயன்படுத்தி வந்தனர் .

.இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதி, மின்சார நிலைய வீதிகள் மிக நெரிசலுக்குள்ளானதோடு , புகை மற்றும் மாசுபடுத்தலும் நகரப்பகுதியில் அதிகரித்தது .

இந்த நிலமையை கருத்தில் கொண்டு , புதிய நெடுந்தூர பேருந்து நிலையம் ஒன்று நகர அபிவிருத்தி அதிகார சபை அமைத்து மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் வழங்கியது. அந்த பேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது.

திறந்து வைத்துள்ள பேருந்து நிலையத்திலிருந்து தனியார் மற்றும் இ.போ.ச. பேருந்து சேவைகளை தொடர வேண்டும் என்று முதல்வர் கட்டளையிட்டுள்ளார் . இதில் தான் தற்பொழுது சிக்கல் ஏற்பட்டுள்ளது .

புதிய பேருந்து நிலையத்துக்கு தாங்கள் மாற வேண்டிய அவசியம் இல்லை எனவும் , தனியார் பேருந்துகளை அங்கே மாற்றுங்கள் என்றும் இ.போ.ச வடபிராந்திய தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

இது இலங்கை போக்குவரத்து சபையின் சொந்த பேருந்து நிலையம். சொந்த இடத்தைவிட்டு வெளியேற முடியாது எனவும் , புதிய பேருந்து நிலையத்துக்கு நாங்கள் வந்தால் தனியார் பேருந்து காரர்களுக்கே நன்மை கிடைக்கும் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய தொழிற்சங்கம் சொல்கிறது .

அவர்கள் சொல்வதில் சில உண்மைகள் இருக்கதான் செய்கின்றன . தற்போது இயங்கும் பேருந்து நிலையத்தை 1970 ஆம் ஆண்டு , அப்போதைய யாழ்ப்பாணம் மாநகர முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பா இலங்கை போக்குவரத்துதுறையின் வடபிராந்தியத்துக்கென எழுதி கொடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் இந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது . இதற்கு சாட்சியாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி மற்றும் குறிப்பிட்ட ஆவணங்களும் உள்ளன.

வடக்கில் இலங்கை போக்குவரத்து துறையினருக்கென சொந்தமாக உள்ள ஒரே ஒரு பேருந்து நிலையமும் இதுவாகும் . எனவே இதனை விட்டு வெளியேற அவர்கள் விரும்பவில்லை. தவிரவும் அவர்கள் கூறிய தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதும் முற்று முழுதாக மறுத்துவிட முடியாத காரணம் ஓன்றுதான்.

நெடுந்தூர போக்குவரத்தில் ஈடுபடுகிற தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களில் பலர் தென்னிலங்கை அரசியல்வாதிகள் அல்லது அவர்களது பினாமிகளாகவே இருக்கிறார்கள். இதனால் புதிய இடத்தில் அவர்களது செல்வாக்கு அதிகரித்து விடும் என்கிற அச்சம் இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்திய சாரதிகள், நடத்துனர்களுக்கு உண்டு .

அவர்களிகளிற்கிருக்கும் அச்சம் நியாயமானதே. ஏனெனில் பிற மாவட்டங்களில் அவ்வாறான நிலமைகளே இருக்கின்றன.

ஆனால் இந்த இலங்கை போக்குவரத்து சபை எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாத ஒன்றா என்றால் அதற்கும் விடை இல்லை என்றே வரும். ஏனெனில் அவர்களும் ஏதோ ஒரு அரசியல் பின்னணியில் இயங்குபவர்களே . சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நியமனங்களில் கூட அரசியல் தலையீடுகள் இருக்கின்றன . ஆனால் ஒப்பீட்டளவில் அரசியல்வாதிகளுக்கு லாபம் தரக்கூடியது என்ற வகையில் தனியார் பேருந்துகளில் அவர்களின் செல்வாக்கு அதிகமாகவே இருக்கும் . எனவே இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நியாயமானவையே .

ஆனால் அவர்களது கோரிக்கைகளுக்கமைய தனியார் பேருந்துகளை மட்டும் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றுவதும் முடியாத காரியமே. ஏனெனில் அதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகரில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச. பேருந்து சேவைகள் இணைத்து நடத்துவதில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் உறுதியாக உள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வராக பொறுப்பேற்ற பின், வி.மணிவண்ணன் முகம் கொடுக்கும் மிகவும் சவாலுக்குரிய பிரச்சினை இதுவாகும் . ஆனால் அதற்குரிய பக்குவத்தோடு இதனை முதல்வர் கையாள்வதாக தெரியவில்லை.

யாழ்ப்பாணம் மாநகரத்தின் வாகனநெரிசல், தூய்மை மற்றும் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு பார்த்தால் புதிய பேருந்து நிலையத்துக்கு தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் மாற வேண்டியது அவசியமே .

ஆனால் அதேவேளை வட பிராந்தியத்தை வதிவிடமாக கொண்ட அரச பேருந்து சாரதிகளின் வருமானத்தில் இழப்பு எதுவும் ஏற்பட்டும் விடக்கூடாது .

இந்த இரண்டு முரண்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு , இரண்டு தரப்பினரிடையேயும் பலராதரப்பட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டு இதற்கான தீர்வை காணவேண்டும்.

எது எப்படியோ வட பிராந்தியத்தை வதிவிடமாக கொண்ட சாரதிகள், நடத்துனர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் வருமானம் பாதிக்கப்படாமலிருக்க கூடிய ஒரு தீர்வை இதற்கு காணவேண்டிய பொறுப்பும் கடப்பாடும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு உண்டு .