படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 41 பேர் கொண்ட இலங்கையர்கள் குழுவொன்று ஆஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்புவ, தொடுவாவ மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்.
இவர்களில் 35 பேர் பெரியவர்கள், மற்ற ஆறு பேர் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.
கிறிஸ்மஸ் தீவில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதே விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கையர்கள் குழு நேற்று இரவு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் மாலன் ஜயசூரிய முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். அவர்களில் 37 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த கடல் பயணத்தை ஒழுங்குபடுத்துவதற்கு நேரடியாக பங்களிப்பு செய்த நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு எதிர்வரும் 30ஆம் திகதி நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.