Sunday, May 28, 2023
Homeஉள்ளூர் செய்திகள்படையினர் 26 பேரை கொலை செய்தமைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை; 14 ஆண்டுகளின் பின் தமிழ்...

படையினர் 26 பேரை கொலை செய்தமைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை; 14 ஆண்டுகளின் பின் தமிழ் கைதிகள் மூவர் விடுதலை

படையினர் 26 பேரை படுகொலை செய்து தீமூட்டி எரித்தனர் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் தமிழ் அரசியல் கைதிகள் மூவரை விடுவித்து விடுதலை செய்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

14 ஆண்டுகளாக தடுப்பில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவர் மீதும் முன்வைக்கப்பட்ட அரச சாட்சியத்தின் ஒப்புறுதி வாக்குமூலம், நிபுணத்துவ சாட்சியங்கள் மற்றும் சான்றுப்பொருள்கள் என்பன எதிரிகளான தமிழ் அரசியல் கைதிகள் மூவர் மீதான 27 குற்றச்சாட்டுகளை போதுமான ஆதாரங்களுடன் எண்பிக்கவில்லை என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தனது தீர்ப்பில் கோடிட்டுக் காட்டினார்.

2009 ஜனவரி 12ஆம் திகதி அதற்கு அண்மித்த தினமான புதுக்குடியிருப்பு வன்னிபுனம் பகுதியில் படையினர் 26 பேரை படுகொலை செய்து தீமூட்டி எரித்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் இருவர் அரச சாட்சியாக மாற்றப்பட்டனர்.

2009ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 45), கரவெட்டியை சேர்ந்த மதியரசன் சுலக்சன் (வயது 34), முள்ளியவளையை சேர்ந்த கணேசன் தர்சன் (வயது 33) ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

அந்த வழக்கிலேயே வவுனியா மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து மூவரையும் விடுவித்து விடுதலை செய்தது.

அவர்களது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வவுனியா மேல் நீதிமன்றினால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில் மூவர் மீதான வழக்கு விசாரணைகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் போராளி ஒருவர் அரச தரப்பின் சாட்சியாக மாற்றப்பட்டார். அவரது பாதுகாப்பு காரணங்களுக்காகவே வழக்கு விசாரணைகளை அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதாக சட்ட மா அதிபர் அறிவித்திருந்தார்.

பின்னர் தமிழ் அரசியல் கைதிகளின் உணவு ஒறுப்பு போராட்டம் மற்றும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மீளவும் வழக்கு விசாரணைகள் மாற்றப்பட்டன.

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் மீதும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 27 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கில் அரச சாட்சியாக மாற்றப்பட்ட முன்னாள் போராளி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில் அவர் மறுவாழ்வுக்கு உள்படுத்தப்படாமல் அரச சாட்சியாக மாற்றப்பட்டமை தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தனது தீர்ப்பில் கேள்வியாக எழுப்பியிருந்தார்.

அரச சாட்சியாக மாற்றப்பட்டவரின் சாட்சியம் ஒப்புறுதிவிக்கவில்லை என அதனை மேல் நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.

வழக்கில் சேர்க்கப்பட்ட தடயவியல், உடற்கூற்று நிபுணத்துவ சாட்சியங்கள் மற்றும் சான்றுப்பொருள்கள் குற்றச்சாட்டுகளை எண்பிக்கும் வகையில் போதிய ஆதாரங்களை கொண்டிருக்கவில்லை என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular