யாழ்ப்பாணத்தில் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் செயற்பாடுகள் இன்னும் நடைபெறுவது தமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்
வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விரைந்து சட்ட நடவடிக்கைகளை எடுக்க அவர், பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமி கேதீஸ்வரன் தர்மிகா (வயது-17) நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலை வெளியிட்ட வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் செயற்பாடுகளை தடுக்கும் வேலைத் திட்டத்தை விரைந்து முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
அத்துடன், சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் விரைவான – நம்பகமான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு ஆளுநர் பணித்துள்ளார்
மேலும் வடமாகாண ஆளுநர் செயலக அலுவலர்கள் இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அத்துடன், பொதுமக்களும் இது தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் கேட்டுக் கொண்டார்.