பாடசாலை மாணவர்கள் கல்வி பயணங்களுக்கு செல்லக்கூடிய தூரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி, ஒரு நாளைக்கு மாணவர்கள் செல்லக்கூடிய அதிகபட்ச தூரம் 100 கிலோ மீற்றாக மட்டுப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி, கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் மாணவர்களை மாலை 6 மணிக்கு முன் அந்தந்த பாடசாலைக்கு அழைத்து வர வேண்டும். எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் மேற்கொள்ளும் கல்விப் பயணங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது.
புதிய அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையை அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் மூத்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
நுவரெலியா நானுஓயாய ரடெல்ல பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதையடுத்து புதிய சுற்றறிக்கையை வெளியிடுவது தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். தர்ஸ்டன் கல்லூரியைச் சேர்ந்த 43 மாணவர்கள் உட்பட 53 பேர் காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.