பிரியலக்ஸ்சன் சதமடிக்க 50 ஓவர்களில் 402 ஓட்டங்களைக் குவித்து வரலாற்று வெற்றியைப் பெற்றது ஓல்ட் கோல்ட்ஸ்

பிரியலக்ஸ்சன், சிறிகுகனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்களில் 402 ஓட்டங்கள் என்ற இமாலய ஓட்ட எண்ணிக்கையை குவித்து வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணி வரலாறு படைத்துள்ளது.

இமாலய ஓட்ட எண்ணிக்கையை விரட்டிய யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் அணி 31.5 ஓவர்களில் 188 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 214 ஓட்டங்களால் தோல்வியைக் கண்டது.

யாழ்ப்பாணம் கிரிக்கெட் சம்பியன் (Jaffna Cricket Champion) -2020 தொடரின் லீக் போட்டி வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணிக்கும் யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் அணிக்கும் இடையே இன்று தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

50 ஓவர்களைக் கொண்ட இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஜொலி ஸ்ரார் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணிக்கு பிரியலக்ஸ்சன் 147 ஓட்டங்களைக் குவித்து அபார சதத்தைப் பெற்றார். மற்றொரு துடுப்பாட்ட வீரரான சிறிகுகனும் அதிரடியாக 98 ஓட்டங்களைக் குவிக்க ஓல்ட் கோல்ட்ஸ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களையிழந்து 402 ஓட்டங்களைக் குவித்தது.

பிரியலக்ஸ்சன்

பந்து வீச்சில் ஜனார்த்தனன் 3 விக்கெட்டுக்களையும் சோபன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 50 ஓவர்களில் 403 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய ஜொலி ஸ்ரார் அணி 31.5 ஓவர்களில் 188 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து சகல விக்கெட்டுக்களையுமிழந்தது.

இதன்மூலம் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணி 214 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்றது. இந்தத் தொடரில் தனது புள்ளிக் கணக்கையும் ஓல்ட் கோல்ட்ஸ் ஆரம்பித்தது.

துடுப்பாட்டத்தில் ஜனார்த்தனன் 48 ஓட்டங்களையும் காள்கோவன் 35, வாமனன் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சிறிகுகன் 4 விக்கெட்டுக்களையும் ஜிந்துசன், பிரியலக்ஸ்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.