Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்புத்தூரில் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்; 25 பெண்கள் உள்பட 31 பேர் கைது - ஊரோடு...

புத்தூரில் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்; 25 பெண்கள் உள்பட 31 பேர் கைது – ஊரோடு கைது செய்ய பொலிஸார் தீவிரம்

புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 25 பெண்கள் உள்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பலரை தேடி வருவதாக பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் – புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த நூற்றுக் கணக்கனோர் இருவரையும் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இரண்டு வீடுகளும் முற்றிலும் சேதமடைந்ததுடன் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து அசிங்கமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன என்று அச்சுவேலி பொலிஸ் நிலையம் ஊடாக சைபர் குற்றப் பிரிவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் முறையிட்ட நிலையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமையே குறித்த வன்முறைக்கு காரணம் என தெரிய வருகிறது.

அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இளைஞர்கள் இருவர் மீது சந்தேகம் கொண்டு அவர்களின் வீடுகளுக்குள் நேற்றிரவு 11.30 மணியளவில் புகுந்த நூற்றுக் கணக்கானோர் அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அத்துடன், வீடுகளுக்குள் இருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் வீட்டு வளாகத்திலிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை தடுத்த போதும் அங்கு வருகை தந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வன்முறை சம்பவம் தொடர்பிலான மேலும் பலரை கைது செய்ய அச்சுவேலி பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular