பெண் விரிவுரையாரின் உயிரிழப்பில் நடந்தது என்ன?

திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரும், ஈழத்து கவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவியுமான போதநாயகியின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழத்தியுள்ள நிலையில், அவர் இறுதியாக கடந்த வியாழக்கிழமை (20.09.2018) அன்று ஒரு உருக்கமான வலிசுமந்த வார்த்தைகளுடனான கவிதை ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி போதநாயகி செந்துரன் (வயது-29) என்ற கர்ப்பிணி பெண்ணே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

போதநாயகி தனது முகநூலில் வெளியிட்டுள்ள கவிதை அவரது இறுதி வாக்குமூலமாக அனைவரினாலும் பேசப்படுகிறது.

[box type=”shadow” align=”” class=”” width=””]

வருடம் ஒன்றாகி விட்ட்து,

உன் கதை கேட்டு, இன்று நீயும் இல்லை, உன் கதையும் இல்லை சகோதரியே….

நான் கவிஞருமல்ல,இது கவிதையுமல்ல…….

அன்பெனும் கூரிய ஆயுதத்தால்

கொடூரமாக தாக்கப்பட்ட ஒரு பெண்ணின் புலம்பலும் கண்ணீரும்…..

பெண்ணாய் பிறந்ததொன்றே யாம் செய்த பெரிய பாவம் என

சில பெண்கள் புலம்பிய போது பெரிதாக உணரவில்லை

அதன் அர்த்தமதை…. அர்த்தமது ஆழமாக உணரப்பட்டதால்

இப்போது இயம்புகின்றேன்…..

“நல்லவன்” என்ற தகுதி மட்டுமே போதுமாயிருந்தது….

நான் உன்னை தேர்ந்தெடுப்பதற்கும் நீ என்னுள் நிரந்தரமாய் ஐக்கியமாவதற்கும்….

அத்தகுதியும், உன் மேல் கொண்ட அளவு கடந்த நம்பிக்கையுமே

இன்றென்னை அணுஅணுவாய் கொல்கிறது……

அதீத அன்பு அருகதையற்றோர் மீது காட்டப்படுவதால் தானோ என்னவோ

அது ஆயுதமாய் எம்மீது எறியப்படுகிறது…

அன்பே உருவானவர்கள் நாமெல்லோரும்….

இதில் ஆணென்ன பெண்னென்ன சமத்துவமறிந்து சமமாய் நடத்த தெரியாதெனின்

அவர் மானிடரே அல்லர்.

உங்களுக்கு உண்மையாய், உயிராய் இருக்கும் பெண்ணவளை

உயர்வாய் எண்ணாவிடினும் ஓர் உயிருள்ள ஜீவனாய்

உணர்வுள்ள உயிராய் மதியுங்கள்….

அவள் உயிர் பிரியும் வேளையிலும் உன்னை எண்ணி மட்டுமே கலங்குவாள்….

மாறாக அவளை கள(ல)ங்கப்படுத்த எண்ணினால்,

இப்பிறவியிலல்ல எப்பிறவியிலும் எல்லையில்லா

அவள் அன்பை எள்ளளவும் பெற மாட்டீர் என்பது திண்ணம்…….

(NK .Potha 20.08.2017)

[/box]


இவ்வாறு அவரது அந்தக் கவிதை அமைந்துள்ளது. கவிதையின் இறுதியில் தனது தந்தை நடராஜாவின் பெயரைக் குறிக்கும் முதல் எழுத்தையே அவர் பயன்படுத்தியுள்ளார்.

ஓகஸ்ட் 20, முற்பகல் 9:36 அன்று பதிவிடப்பட்டு, செப்ரெம்பர் 18, முற்பகல் 11:54 அன்று மீண்டும் அக்கவிதையை சீராக்கம் (எடிற் )செய்துள்ளார்.

விரக்தியின் அதி உச்சத்தில் கவிதையை சீரமைத்துப் பதிந்துவிட்டு, கணவரிற்கு மறுநாள் குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.  கடந்த புதன் கிழமை (19) எனக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார் என்று கணவர் கூறியிருந்தார்.

“இரண்டு நாள்கள் நான் விடுமுறை எடுத்துக்கொண்டு வருகிறேன், எங்கள் பதிவுகளையும் மேற்கொண்டு எனது அம்மா வீட்டுக்கும் செல்வோம்” என அந்தக் குறுந்தகவல் அமைந்திருந்தது என்று கணவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“அதன் பின்னர் அவரது கைபேசி வேலை செய்யவில்லை. சில வேளை வேலைப்பளு எனில் அவரது அம்மா வீட்டுக்கு சென்றிருப்பார் என நான் நினைத்தேன்.

பின்னர்தான் அவரது அம்மாவும் அங்கு வரவில்லை, அவளைக் காணவில்லை எனச் சொன்னார்.

பின்னர் அவரது கைப்பை திருகோணமலை நகர கடற்கடைப் பகுதியில் இருப்பதாகவும் சடலம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

எனது மனைவி தற்கொலை செய்யக் கூடியவள் அல்ல. அதற்கான எந்த தேவையும் இல்லை. இந்த மரணத்தில் எனக்கு சந்தேகம் இருக்கிறது” என வன்னியூர் செந்தூரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டாரா?? அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா?? அல்லது கொலை தற்கொலையாக மாற்றப்பட்டதா?? என பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

கர்ப்பிணி பெண்ணிற்கு மிக நெருங்கிய பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “கடந்த 20ஆம் திகதி நண்பகல்வரை போதா அக்கா எம்முடன் பணியில் இருந்தார். அவர் இயல்பாகவே அன்று இருந்தார்” என்றார்.

“போதா அக்கா மீதான கொடுமைகளால் அவர் தற்கொலை செய்திருப்பார். அவர் அதனையே தனது கவிதை மூலம் வெளிப்படுத்திச் சென்றுள்ளார்” என்றும் அவரது நண்பிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை,  பெண் விரிவுரையாளர் நீரில் மூழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலேயே உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் விரிவுரையாளரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

“பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. பெண் இரண்டு அல்லது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நீரில் மூழ்கியமையால் இடம்பெற்ற மூச்சுதிணறனாலேயே அவர் உயிரிழந்தார்” என்று சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வனின் செய்தியாளன்

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!