பொலன்னறுவை மனம்பிட்டியவில் நேற்றிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 40 பேர் காயம் அடைந்துள்ளனர், சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் 10 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மனம்பிட்டிய கொட்டாலிய பாலத்தின் மீது மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
படுகாயமடைந்த ஒரு குழுவினர் மனம்பிட்டிய மற்றும் பொலன்னறுவை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில், விபத்து நடந்தபோது பேருந்தில் சுமார் 67 பேர் பயணம் செய்ததாக பொலிஸார் நம்புகின்றனர்.
விபத்தைத் தொடர்ந்து ஆற்றில் சுழியோடிகள் தேடுதல் செய்தனர். மேலும் பேருந்து ஆற்றில் வீழ்ந்தபோது அதில் இருந்த சில நபர்கள் கீழே இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் கூறினர்.

மனம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
