பொதுமக்களின் எதிர்ப்பு வந்தால் மட்டுமே வாகன இறக்குமதித் தடை தளர்வு பற்றி அரசு பரிசீலிக்கும்

0

வாகன இறக்குமதித் தடையை எதிர்த்து பொது மக்கள் வீதிகளில் இறங்கினால் மட்டுமே அதனைத் தளர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

“புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கான தடையை எதிர்த்து பொது மக்கள் வீதிக்கு வந்தால், நாங்கள் அதைப் பற்றி சிந்திக்கலாம். ஆனால் இப்போதைக்கு, எங்கள் அக்கறை எங்கள் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.

வாகன இறக்குமதியாளர்கள் பதிவு செய்யப்படாத வாகனங்களை விற்பனை செய்திருந்தாலும், அவர்கள் இரண்டாவது உரிமை மாற்று வாகன சந்தையில் அவர்கள் வணிகத்தைத் தொடர முடியும் என்று அமைச்சர் கூறினார்.

நாட்டில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாகன விற்பனையாளர்கள் தங்கள் வாகனக் காட்சியறைகளை மூடிவிட்டனர், தற்போது நாடுமுழுவதும் சுமார் ஆயிரம் வாகனங்கள் மட்டுமே உள்ளன. இதுதொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்று கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

வாகன இறக்குமதியில் தற்போதுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக தொழில்துறையின் பெரும்பகுதி ஏற்கனவே வணிகத்திலிருந்து வெளியேறிவிட்டது என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் லங்கா (VIAL) தலைவர் இந்திகா சம்பத் மெரஞ்சீஜ் குற்றம் சாட்டினார். மீதமுள்ள வழங்குனர்களும் விரைவில் வெளியேறும் வரிசையில் சேருவார்கள் என்று அவர் கூறினார்.

“இரண்டு வருடங்களுக்கு போதுமான வாகன இருப்பு இருப்பதாக அரசு கூறியிருந்தாலும், தற்போது நாடுமுழுவதுமுள்ள காட்சியறைகளில் சுமார் 1,000 வாகனங்கள் மட்டுமே உள்ளன. இந்த வாகனங்களை விற்ற பிறகு, அனைத்து வாகன விற்பனையாளர்களும் தங்கள் வணிகத்தை நிறுத்த வேண்டும்”என்று மெரஞ்சீஜ் கூறினார்.