பொருளியல் ஆசான் வரதராஜன் மேல் சேறு பூசல்களின் பின்னணி?

யாழவன்

பொருளியல் ஆசான் வரதராஜன் மேல் சேறு பூசும் வேலைகளை அவ்வப்போது மறைமுகமாக செய்து வந்ந்திருந்தாலும் , கடந்த சில வாரங்களாக அதை கொஞ்சம் அதிகரித்து இருக்கிறார்கள் இருவரை அடிப்படையாக கொண்ட சைக்கிள் கட்சியினை தீவிரமாக ஆதரிக்ககூடியவர்கள்.

அதுகூட அவர்களோடு அரசியல் செய்தவர் என்கிற அடிப்படையில் , அவர்களோடு அரசியல் செய்த பலரை அவர்கள் அவ்வாறுதான் நடத்திருந்தார்கள் என்ற அடிப்படையில் கடந்து சென்று விடலாம் . ஆனால் தற்பொழுது வரதராஜன் ஆசிரியரின் மனைவி மேல் சேறு பூசும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள் அவர்கள் .

இது சைக்கிள் கட்சியின் ஆதரவாளர்கள் அல்லது அவர்களை தூண்டிவிடும் சைக்கிள் கட்சியின் முக்கியஸ்தர்கள் செய்யும் புதிய விடயம் அல்ல . இதை அவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை செய்தே வருகிறார்கள். சமூகவலை தளத்தில் கூட்டமைப்பின் சார்பில் இருந்த பல நூற்றுக்கணக்கானோர் பேசாமல் ஒதுங்கி சென்றத்துக்கு காரணமே இவர்களது இத்தகைய அணுகுமுறையே ஆகும்.

குடும்ப உறுப்பினர்களை இழுத்து கதைத்தால் அவர்கள் உடனே விலகிடுவார்கள் என்று இவர்கள் திட்டமிட்டு இதை செய்து வந்தார்கள் . அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள் .

கூட்டமைப்பின் சார்பில் ஆரம்ப காலங்களில் பல பெண்கள் சமூக வலை தளத்தில் பேசி கொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட காலத்துக்குள் அவர்கள் அவ்வளவு பேரும் மௌனமானார்கள். அதே மாதிரி பல ஆண்களும் தங்கள் குரல்களை தங்களுக்குள்ளேயே அடக்கி கொண்டார்கள். இது பற்றிய விமர்சனங்கள் அவ்வப்போது எழுந்த போதெல்லாம் இல்லை என்று மறுத்து நங்கள் “கொள்கைக்காக ” நிக்கிறவர்கள் என்று கூறி வந்தார்கள் .

ஆனால் அதெல்லாம் உண்மை என்று அன்று அவர்களுடன் இருந்தவர்களே இன்று வாக்குமூலங்கள் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள் . கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொள்கைக்காகாவே அவருடன் நிக்கிறோம் என்றவர்களில் பலர் இன்று அவரிடம் என்ன கொள்கை இருக்கு என்று கேட்கிறார்கள் ?

சில நாள்களுக்கு முன் பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்திபன் ” குடும்ப உறுப்பினர்களை இழுத்து கேவலமாக கதைக்கும் தன்மை உள்ளவர்களை அதிகமாக கொண்ட கட்சி நான் சார்ந்த கட்சி ” என்று தொடங்கி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் .

அவரது பதிவு பற்றி நிறைய அலச வேண்டியுள்ளது . ஆனால் அதை பார்க்க முதல் சின்னத்துரை வரதராஜனின் அரசியல் பயணம் பற்றி பார்க்கவேண்டும்.

கடந்து சென்ற ஆறு தசாப்த காலங்களில் யாழ்பாணத்தில் வர்த்தகப் பிரிவில் படித்த மாணவர்கள் அனைவருமே அறிந்திருந்த ஒரே ஒரு பெயர் என்றால் அது வரதராஜன் ஆசிரியர் மட்டுமே . உயர்தர பிரிவில் வர்த்தகதை பாடமாக கொண்டவர்கள் படிக்கிற பாடங்களான வணிகம், கணக்கீடு, பொருளியல் போன்ற பாடங்களில் பொருளியல் பாடத்தை கற்பிப்பதில் சிறந்து விளங்கியவர்தான் வரதராஜன் ஆசிரியர்.

அவர் கற்பிக்க தொடங்கிய காலங்களில் அவருக்கு நிகராக பொருளியல் கற்பிக்கும் சில ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த பொழுதும், அவரது படிப்பிக்கும் சிறப்பியல்பை பார்த்து அவரை தேடி மாணவர்கள் சென்றார்கள். ஒரு வருடம் அல்ல , இரண்டு வருடம் அல்ல கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக பொருளியலை கற்பித்து பல்லாயிரம் மாணவர்கள் பல்கலைகழகம் போக காரணமாக இருந்தவர்.

வெறுமனவே பாடங்கள் மட்டும் கற்பிக்காமல் உதாரண கதைகள் மூலம் சமூகம் சார் கருத்துக்களையும் மாணவர்களிடையே புகுத்தியவர். அவரிடம் இருந்த பொருளியல் சார் அறிவுகளை கண்டு தமிழீழ விடுதலை புலிகளே தங்களது நிர்வகிக்கத்துக்குரிய ஒரு சில கட்டுமானங்களுக்கு அவரின் ஆலோசனைகள் பெற்றிருந்தனர் .

தமிழீழ விடுதலை புலிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட வரி கொள்கைளிகளின் பின்னே கூட அவரது ஆலோசனைகளும் இருந்திருந்தன .

நம் தேசத்துக்குரிய வளங்கள் நம் தேசத்திலேயே பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற கொள்கைகளை அன்றே கொண்டிருந்தவர். அவ்வாறான ஒருவர், ஒரு ஆசானாக அறியப்பட்ட ஒருவர் ஏன் அரசியலுக்குள் வந்தார் ? அவருக்கு அரசியல் ஆசை இருந்ததா ? அரசியலுக்குள் இறங்கும் நகர்வுகளை மேற்கொண்டாரா? முக்கியமாக அவர் துரோகம் புரிந்தாரா ? என்பது பற்றி ஆராய விளைகிறது இந்தப் பத்தி .

இந்த கேள்விகளுக்கான விடைகளை பார்க்க முதல் 2009 -2010 இல் நடந்த அரசியல் நகர்வுகள் மாற்றங்களை பார்க்க வேண்டும் . ஏனெனில் வரதராஜன் ஆசிரியர் அரசியலுக்குள் நேரடியாக காலடி எடுத்து வைத்தது 2010 இல்தான் . அவர் அவ்வாறு காலடி எடுத்து வைப்பதற்கு எதுவாக அமைந்ததில் முக்கியமானது 2009 -2010 காலப்பகுதியில் நடைபெற்ற அரசியல் நகர்வுகள் மற்றும் மாற்றங்கள்தான் .

2009 இறுதிப் போர் முடிவடைந்த பின்னரான காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்ற தொடங்கி இருந்தன . இறுதிப் போரின் பொழுது காத்திரமான சில நடவடிக்கைகளை எடுத்திருக்க கூடிய நிலை இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், அதை செய்யவில்லை அல்லது செய்வதற்கு முயற்சித்திருக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுகளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் கருத்துக்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் வெளியிட்டு கொண்டிருந்தார்கள் .

தமிழீழ விடுதலை புலிகள் இயங்கும் நிலையில் இருந்தவரைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுகள் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்தவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் . போர் முடிவடைந்த பின் எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு இயங்க வேண்டும் என்கிறதை கூட்டமைப்பின் கூட்டணி கட்சிகள் சேர்ந்து முடிவு செய்வதென தீர்மானித்திருந்தனர். ஆனால் புலிகள் இயங்கிய காலத்தில் புலிகளோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவர்களான செல்வராஜா கஜேந்திரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தாங்கள் கூட்டமைப்பின் தீர்மானங்களில் அதிக செல்வாக்கை செலுத்த முயன்றார்கள்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்ததால் அவரது கருத்துக்கள் ஓரளவுக்கு உள் வாங்கப்படும் சாத்தியப்பாடு நிலவியது . ஆனால் செல்வராஜா கஜேந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் சார்பாக உள் வாங்கப்பட்டதால் , அதாவது கட்சியின் ஒரு உறுப்பினராகவே அவர் பார்க்கப்பட்டதால் அவரது கருத்துக்கள் உள்வாங்கப்படாத நிலையிலேயே அப்போதைய சில முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன.

இதுவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்கிற அரசியல் கட்சி உருவாக்கத்திற்கு அடிப்பைடையாக அமைந்தது என்றே கருதலாம் . இத்தகைய சூழ்நிலையில்தான் 2010ஆம் ஆண்டு நடத்தப்பட இருந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவித்தல் வெளிவந்தது . அந்த அறிவித்தலை தொடர்ந்து கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் இருந்து எத்தனை எத்தனை பேர் உள்ளடக்கப்பட்டு, தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது என்கிற முடிவுகள் கூட்டணி கட்சிகளால் எடுக்கப்பட்டன . அதன் படி அந்த அந்த கட்சிகள் கொடுத்த வேட்பாளர்களின் பெயர்களில் ” செல்வராஜா கஜேந்திரன் , பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை .

இதனால் விடுதலை புலிகளால் நியமிக்கப்பட்டிருந்த உறுப்பினர்களை ஒதுக்கி தமிழ் தேசிய பாதையிலிருந்து விலகுகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கிற விமர்சனம் கூட்டமைப்பு மேல் பரவலாக முன் வைக்கப்பட்டது . அதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் “அவ்வாறு அல்ல . அவர்கள் தங்களை எந்த கட்சியின் உறுப்பினர்களாகவும் பதிய மறுக்கிறார்கள். கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் இல்லாத ஆள்களின் பெயரை வேட்பாளராக நிறுத்த மறுக்கிறார்கள்” என்ற கருத்துப்படகூடிய வகையில் கருத்துக்களை பகிர்ந்திருந்தார் .

இரா. சம்பந்தனின் கருத்துக்கள் பொய்யானவை என்று முழுமையாக மறுத்துவிட முடியாது . ஏனெனில் 2004ஆம் ஆண்டு செல்வராஜா கஜேந்திரன், பதமினி சிதம்பரநாதன் போன்றோரை தெரிவு செய்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அவர்களை புலிகள் தெரிவு செய்திருந்தாலும் , அவர்கள் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்காளாகவே கூட்டமைப்பின் வேட்பாளராக உள் வாங்கப்பட்டிருந்தனர். 2010இல் புலிகள் இல்லாத காரணத்தால் அவர்களை கட்சியின் உறுப்பினராக சேர்ந்து கொள்ளும்படி கேட்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் ” இல்லை புலிகள் இருக்கும் பொழுது எம்மை எப்படி எடுத்தீர்களோ அப்படியே எங்களை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் கேட்டிருந்தார்கள் . ஆனால் எதிர்காலத்தில் கூட்டமைப்புக்குள் எழும் பிரச்சனைகளை கையாள்வது கடினம் என்பதால் கட்சி தலைவர்கள் அதை மறுத்திருந்தார்கள்

அதாவது உறுப்பினர்கள் பிழை விடும்பொழுது கட்சி தலைமையே அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு பொதுவாக எடுப்பவர்களை கட்டுப்படுத்துவது யார் ? என்கிற பிரச்சினைகளால் அவர்கள் இதற்கு சம்மதிருக்கவில்லை

இந்த இழுபறியில் அவர்கள் இல்லாமலே வேட்பாளர்கள் இறுதிசெய்யப்பட , வேட்பு மனு தாக்கலுக்கு சில நாள்கள் இருக்கத்தக்க நிலையில் , அவர்களை எடுக்காவிட்டால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இதிலிருந்து விலகி கொள்ளும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்தார் . ஆனால் அவர் அந்த அறிவிப்பை வெளியிட முதல் , கூட்டமைப்பில் போட்டியிடும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளரகளாக அப்பாதுரை விநாயகமூர்த்தி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு கையெழுத்து வைத்து கூட்ட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் கொடுத்திருந்தார் .

இதனால் குழம்பிய அப்பாதுரை விநாயகமூர்த்தி தான் தொடர்ந்தும் கூட்டமைப்பிலேயே இருப்பேன் என்று கூறிவிட்டார். அப்பாதுரை விநாயகமூர்த்தி அப்பொழுது அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேட்பு மனு தாக்களுக்கு சில நாள்கள் இருக்க கூடியதாக கூட்டமைப்பை விட்டு விலகிய பின்னரே பொருளியல் ஆசானாக இருந்த சின்னத்துரை வரதராஜன் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை உருவாகியது.

செல்வராஜா கஜேந்திரன் , பத்மினி சிதம்பரநாதன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் புலிகள் இருந்த காலத்தில் புலிகளுடன் நெருங்கிய தொடர்ப்பில் இருந்தவர்கள் என்கிற வகையிலும் , தமிழ் தேசியத்தின் பாதையில் பயணித்தவர்கள் என்ற வகையிலும் , இவர்கள் பிரிந்து தனியே இயங்க வெளிக்கிட்டதை மக்களில் சிலர் வரவேற்கவே செய்தார்கள். அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு திசை மாறி பயணிக்கிறது என்று நம்பிய சிலர் அதற்கு மாற்றீடாக ஒரு தமிழ் தேசிய கட்சி உருவாக்க வேண்டும் என்று நினைக்கதலைப்பட்டார்கள். அவ்வாறு நினைக்க தள்ளப்பட்டவர்களில் ஒருவர்தான் பொருளியல் ஆசிரியர் சி.வரதராஜன்.
.

இன்னமும் சில நாள்களே வேட்பு மனு தாக்கலுக்கு இருந்த நிலையில் அவசரம் அவசரமாக தங்கள் கட்சிக்கு தேவையான வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு இருந்தது. “பிரிந்து போனவர்கள் மட்டுமே நிற்கிறார்கள், இது வெறும் தேர்தலுக்காக இணைந்தவர்கள்” என்கிற பார்வையையும் மறுதலிக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்தது . அந்த வகையில் அவர்களுக்கு ஒரு புதிய ஆனால் மக்களுக்கு தெரிந்த, அரசியல் சார்பற்ற முகம் ஓன்று தேவைப்பட்டது . அப்பொழுது தான் பொருளியல் ஆசான் சின்னத்துரை வரதராஜன் மேல் அவர்களின் பார்வை விழுந்தது.

தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு அவரை சம்மதிக்க வைத்தார்கள். இதுவரை ஆசிரியராகவே சேவை செய்து வந்த அவர், தமிழ் தேசிய அரசியலில் ஏற்பட்ட தொய்வு நிலையை கருத்தில் கொண்டும் , பலரின் தொடர்ச்சியான வேண்டுகோளை ஏற்றும் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். இது அகில இலங்கை காங்கிரஸ் கட்சி அல்ல, மக்கள் இணைந்த ஒரு கூட்டு என்று காட்டும் முகமாக நீங்களே தலைவராக இருந்து வழி நடத்துங்கள் என்கிற உத்தரவாதமும் அவருக்கு கொடுக்கப்பட்டது .

தன்னுடைய உழைப்பால் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த பொருளியல் ஆசான் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்ததுக்கு காரணம் பணம் உழைக்கும் நோக்கம் இல்லை என்பது தெட்டதெளிவானது. தானாக அரசியலுக்குள் நுழைய முயன்றதும் இல்லை அதற்கான முன்னெடுப்புகளை அவர் செய்ததும் இல்லை. இது அவருக்கு அரசியலில் பதவிகளை பெற்று கொள்ளும் ஆசை இல்லை என்பதையும் உறுதிப்படுகிறது. மேலும் அவர் அரசியலுக்கு வரும் முடிவை எடுத்திருக்கிறார் என்பதை அறிந்த யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அவரை தங்கள் சார்பாக கூட்டமைப்பில் நின்று போட்டியிடும்படியும் கேட்டிருந்தார்கள். ஆனால் அதை கூட அவர் மறுத்து முன்னணியிலேயே வேட்பாளராக நிப்பது என்கிற முடிவை எடுத்தார் . எனவே அவர் அரசியலுக்குள் நுழையும் அந்த கணம் வரை எந்தவித அப்பழுக்குமற்றவர் என்பதை உறுதிப்படுத்துகிறது .

2010ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள அகில இலங்கை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முதன்மை வேட்பாளராக சின்னத்துரை வரதராஜனை முன்னிறுத்தியும் , தமிழ் தேசிய மக்கள் முன்னையினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவும் என்று முதலாவது கூட்டம் நடந்தது . அந்த கூட்டத்துக்கு சில நாள்கள் முன்னர் அதாவது பெப்ரவரி 26 ஆம் திகதி தங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்கள். அந்த வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக வேட்பாளராக நின்றவர்கள்

சின்னத்துரை வரதராஜன் -( பிரபல பொருளியல் ஆசிரியர் ) முதன்மை வேட்பாளர்

விஜயரட்ணம் யோன் மனோகரன் கென்னடி – ( முன்னாள் விரிவுரையாளர் – கிழக்கு பல்கலைக்கழகம் )

கந்தசாமி திரிலோகமூர்த்தி – ( வைத்தியர்)

சாந்தன் தீபன் – கடற்தொழிலாளி.

நடேசு துரைராஜா – திருமணப் பதிவாளர்

நாகலிங்கம் குழந்தைவேலு – ஆசிரியர்.

விஸ்வலிங்கம் மணிவண்ணன் – சட்ட மாணவன்.

பிரான்சிஸ் வின்சென்ட் டி போல் – வர்த்தகர்.

செல்லத்துரை சுப்ரமணியம் – ஓய்வுபெற்ற ஆசிரியர்.

பதமினி சிதம்பரநாதன் – மு.நா.உ

செல்வராஜா கஜேந்திரன் -மு.நா.உ

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – (செயலாளர் – அகில இலங்கை காங்கிரஸ் )

” இரு தேசங்கள் ஒரு நாடு ” என்கிற முன்னணியின் கொள்கை வரைபில் முக்கிய பங்காற்றியதுடன் அதை இலகுவாக மக்களுக்கு விளங்கப்படுத்தும் விதத்தில் பல விளக்கங்களை வழங்கி இருந்தார் வரதராஜன் ஆசிரியர் . இருதேசம் ஒரு நாடு சாத்தியமாகவில்லை என்றால் திருகோணமலையில் நடந்த மாதிரிதான் யாழ்ப்பணத்திலும் நடக்கும் என்ற விதத்தில் புள்ளி விவரங்களுடன் தனது தேர்தல் பரப்புரைகளை செய்திருந்தார் .

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க வைக்க பல பொது அமைப்புகள் முயற்சி எடுத்திருந்தன . ஆனாலும் அந்த முயற்சிகள் பயனற்றதாகி போக மேற்படி வேட்பாளர்களுடன் தனது கன்னி தேத்தலில் போட்டியிட்டது தமிழ் தேசிய மக்கள் முன்னணி . அந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வெறும் 6 ஆயிரத்து 362 வாக்குக்களையும் , திருகோணமையில் ஆயிரத்து 182 வாக்குகளை மட்டுமே பெற்று கொண்டது .

அதன் பின்னர் தங்கள் அமைப்பை மீண்டும் கட்டமைத்து வளர்க்க வேண்டிய காட்டாயத்துக்குள் உள்ளானார்கள் . அதுவரை ஓரளவுக்கு சின்னத்துரை வரதராஜனின் ஆலோசனைகளை கேட்டு நடந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் சொல்வதை அவர் கேட்க வேண்டும் என்கிற நிலைக்கு கொண்டு வந்தார்கள் . என்னதான் சின்னத்துரை வரதராஜன் அரசியல் பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் கூட தமிழ் தேசிய அரசியலில் அல்லது தமிழ் தேசியம் தொடர்பாக தொடர்புகளை கொண்டிருந்தவர் ஆவார் .

1995ஆம் ஆண்டு யாழ். இடம்பெயர்வின் பின்னர் கொழும்புக்கு இடம்பெயர்ந்து சென்றிருந்த அவர் அங்கேயே பொருளியல் பாடத்தை கற்பித்து வந்தார் .அவரது மச்சான் முறையினரான முத்துக்குமார் சிறீதரன் எனும் வர்த்தகர் அவர் இல்லத்துக்கு வந்து போபவர் . முத்துக்குமார் சிறீதரன் விடுதலை புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவர் .வர்தகர்களிடமிருந்து புலிகளுக்கு செல்லும் வரி பணத்தை சேகரித்து கொடுப்பவராகவும் விளங்கியவர் . சம நேரத்தில் புலிகளுக்கான வரி கட்டமைப்பு தொடர்பான ஆலோசனைகளை சின்னத்துரை வரதராஜன் வழங்கி இருந்தார் . அவரும் புலிகளுடன் சில தொடர்புகளை கொண்டிருந்தார் என்று நம்பப்படுகிறது .

இதன் பின்னணியில் 2008ஆம் ஆண்டு மே மாதமளவில் வரதராஜன் கடத்தப்பட்டார் . அவரை கடத்திய சில மணி நேரத்தில் அவரது வீட்டில் இருந்து அவருடைய உறவினரான முத்துக்குமார் சிறீதரனும் கடத்தப்பட்டார். சில நாள்களில் வரதராஜன் ஆசிரியர் விடுவிக்கப்பட்டிருந்தார் . ஆனால் சிறீதரன் முத்துக்குமார் விடுவிக்கப்படவே இல்லை .

தனது மச்சான் முறையினரான சிறீதரன் முத்துக்குமார் தன்னுடைய வீட்டிலிருந்து தூக்கப்பட்ட காரணத்திலாலும் , தன்னால்தான் அவரும் கடத்தப்பட்டார் என்று நம்பியதாலும் அவருடைய விடுதலைக்காக தன்னாலான முயற்சியை செய்து கொண்டேயிருந்தார் . அந்த நேரங்களில் கடத்தப்பட்டவர்களை அல்லது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க உறவினர்கள் எங்கே எங்கே போவார்களோ அங்கே அங்கே எல்லாம் ஒரு உறவினராக அவரும் போயிருந்தார் . அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் கூட அவர் போயிருந்தார் .

அவ்வாறான பின்னணி இருக்கும் நிலையில்தான் அவரது அரசியல் பிரவேசம் அமைந்திருந்தது . அவரை அரசியலுக்கு வரவேண்டும் என்று கேட்டு கூட்டி வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இந்த பின்னணி பற்றி அறிந்தேயிருந்தார்கள் .

2010 தேர்தல் தோல்வியின் பின்னர் கட்சியை வளர்க்க வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில் அதை நோக்கி அவர்கள் இயங்க தொடங்கினார்கள் . வெறுமனவே கட்சி வளர்ப்பு மட்டும் அல்லாமல் தமிழ் தேசிய எண்ணகருக்களை மக்களிடையே கொண்டு போய் சேர்க்கும் கட்டுரைகளிலும் கவனம் செலுத்தினார் ஆசிரியர் வரதராஜன். அத்துடன் தனது மச்சானை விடுவிக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டார் .

2011 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தபடும் என்கிற அறிவித்தல் வெளியாகிறது. அப்பொழுது உள்ளூராட்சி தேர்தல்களில் பங்குபற்றலாம் என்ற நிலைப்பாட்டினை வரதராஜன் கட்சிக்குள் தெரிவித்திருந்தாலும் பின்னர் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன்களின் நிலைப்பாட்டை ஏற்று அதில் போட்டியிடுவதில்லை என்கிற கட்சியின் முடிவை ஏற்று கொண்டார் .

” கடத்தல் , கொலைகளில் மட்டுமல்லாது சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடுகளையும் கொண்டுள்ள இந்த அரசு, தமிழர் தாயகத்தில் உள்ளூராட்சி நிர்வாகத்தை அர்த்தமற்றதாக்கியுள்ளது ” என்று கூறி தங்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிக்கையை வெளியிட்டார்கள் .

இவ்வாறு பல விடயங்களில் வரதராஜன் ஆசான் வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும் அதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ அல்லது செல்வராஜா கஜேந்திரனோ பொருட்படுத்துவதில்லை . மாறாக தங்கள் கருத்துக்கள் படியே அவரை நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார்கள்.

இந்த நிலையில் அவர் கட்சி கூட்டங்களில் பங்குபற்றுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டார். தன்னுடைய தலைவர் பதவி பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடும் பொழுது “றபர் ஸ்டாம்ப்” மாதிரியானது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ஒரு வசனமே அவர் எப்படி நடத்தப்பட்டார் என்பதை விளக்குவதற்கு போதுமானது.

இந்த நிலையில்தான் 2013ஆம் ஆண்டு ஆரம்ப காலங்களில் மாகாண சபைத் தேர்தல் அறிவிப்புகள் வெளிவந்தன. மாகாண சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுவதில்லை என்பது என்றோ எடுத்த முடிவு . அது தொடர்பாக அவருக்கு மாற்று கருத்து இருந்திருக்கவில்லை. ஆனால் போட்டியிடுகின்ற கட்சிகளில் தமிழ் தேசிய கட்சியான கூட்டமைப்புக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பது அவரது முடிவாக இருந்தது. தவிரவும் மக்களை பிரதிநித்துவப்படுகின்ற கட்சி என்ற வகையில் “மக்கள் என்ன செய்ய வேண்டும் ” என்பதை தெளிவு படுத்த வேண்டிய கடமையும் கட்சிக்கு உண்டு என்றும் கூறினார் . ஆனால் அவரது கூற்றுகள் அங்கே அவர்களால் ஏற்றுகொள்ளப்படவில்லை .

இதனால் சற்றே விசனப்பட்ட அவர் “சரி நீங்க கட்சியாக என்ன முடிவு என்றாலும் எடுங்கள். ஆனால் நான் வாக்காளான் என்ற வகையில் வாக்களிக்கப்போகிறேன் ” என்று கூறினார்.

“அவ்வாறு நீங்கள் வாக்களித்தால் அது கட்சிக்கு செய்யும் துரோகம் ” என்று செல்வராஜா கஜேந்திரனால் கூறப்பட்டது . அந்த வார்த்தைகள்தான் அவரை கட்சியிலிருந்து முழுமையாக விலகும் முடிவை நோக்கி இழுத்து சென்றது . “வாக்களிப்பதை துரோகம் என்று சொல்கிற கட்சி ஒன்றில் அங்கத்தவராக இருப்பது எனது மனசாட்சிக்கு செய்யும் துரோகம் ” என்று தனது பதவி விலகல் கடிதத்தில் அவர் குறிப்பிடருந்தார் .

ஆனாலும் இந்த பதவி விலகல் தொடர்பான தனது முடிவை தேர்தல் முடியும் வரை அவர் அறிவிக்கவில்லை.தேர்தல் முடிவடைந்து ஒரு வாரத்தின் பின் தான் அரசியலில் இருந்து ஒதுங்கும் தன் முடிவை மக்களுக்கு அறிவித்தார் .

இதுவே அவர் அரசியலுக்கு வந்தது , அரசியலிருந்து விலகயமை தொடர்பான பின்னணி . ஆனாலும் அவரின் விலகல் கடிதத்தை ஏற்று கொள்ளமாட்டோம் என்று கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார் . அவரின் விலகளின் பின்னரும் அவருடன் சில தொடப்புகளை பேணியே வந்தார்கள். இது இவர்களின் ஒரு உத்தி .

முரண்பட்டு விலகியவர்கள் தங்களுக்கு மாற்றாக உருவெடுத்துவிடக்கூடாது என்பதற்காக இந்த உத்தியை இவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதையே பின்னர் அவர்கள் இராஜகுமாரன் ஆசிரியர், பத்மினி சிதம்பரநாதன் போன்ற பலருக்கு பயன்புத்தினார்கள்.இதில் இவர்கள் வெற்றியும் பெற்றார்கள் . முரண்பட்டவர்கள் காணாமல் போய்க்கொண்டே இருந்தார்கள் . அதில் விதி விலக்கு மணிவண்ணன் மட்டுமே .

வரதராஜன் ஆசிரியர் “கட்சியில் எனது கருத்துக்கள் உள் வாக்கப்படாமல் முடிவுகளை எடுப்பது தொடர்பாக பல நேரங்களில் நான் மன வேதனைகளுக்கு உள்ளானேன் ” என்று பதவி விலகலின் பின்னரான நாள்களில் ஒரு இடத்தில குறிப்பிட்டிருந்தார் . இருந்தும்கூட தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக பரப்புரையோ அல்லது நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை . அதே மாதிரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அவர் மேல் எந்தவித குற்றச்சாட்டுகளையும் பொதுவெளியில் முன் வைத்திருக்கவில்லை.

2014 ஆம் ஆண்டு அவர் மறைந்த பொழுது அவரது வீட்டுக்கு சென்று இறுதி சடங்குகளில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் அவரது உடலை சுமந்துசென்றவர்களில் ஒருவராக இருந்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் .

ஆகவே வரதராஜன் ஆசிரியர் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்திலிருந்து , அவரது வாழ்க்கையின் கடைசி தருணம் வரை துரோகம் செய்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை .

ஆனால் தற்பொழுது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் வரதராஜன் ஆசான் மேல் சேறு பூசும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள் . அவர் ஆசிரியராக இருந்த பொழுது நடந்த பிரச்சினைகளை கிளறி அவரை பிழையானவர் எனக்காட்ட முயல்கின்றனர் . அதன் மூலம் அவரது மகனானான பார்த்திபனையும் பிழையானவர் என்று காட்ட முனைகிறார்கள் .

” பிகொம்” தனியார் கல்வி நிறுவன பிரச்சினை களை கிளறி அவரை ” துரோகி ” என்று நிறுவ முயன்றால் கஜேந்திரகுமாரும் துரோகியே . ஏனெனில் அவர்கள் சொல்லும் அந்த சந்தர்ப்பத்தின் பின்னர் தான் அவரை முன்னணியின் முதன்மை வேட்பளராக அறிமுகம் செய்திருந்தார்கள்.

” மச்சானை விடுவிக்க டக்ளசிடம் போனதுதான் துரோகி என்றால் அப்போதும் கஜேந்திரகுமர் துரோகி ஆவார்.்ஏனெனில் அதன் பின்னர்தான் அவரை அறிமுகம் செய்திருந்தார் . அது மட்டும் அல்ல மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்ட பொழுது கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் டக்ளசை சந்திச்சிருந்தார் .செல்வராஜா கஜேந்திரனும் தன்னுடைய தம்பியை விடுவிக்க கோத்தாபயவிடம் போனார் என்கிற கதையையும் நாம் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்

” வாக்களிக்க போகிறேன் ” என்பதுதான் துரோகம் என்றால் அதை நாம் மறுக்கிறோம் . வாக்களிப்பது துரோகம் அல்ல . தவிரவும் கட்சியாக தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதுதான் கட்சியின் முடிவாக இருந்த நிலையில் வாக்களிப்பது கட்சியின் முடிவை மீறியதாகவும் அமையாது “

எனவே வரதராஜன் ஆசிரியர் தமிழர்களின் துரோகியும் அல்ல . தமிழ் தேசிய மக்கள் முன்னையின் துரோகியும் அல்ல. அவர் ஒரு தமிழ் தேசிய பற்றாளனாவே வாழ்ந்திருக்கிறார் . தமிழ் தேசிய பற்றாளனாகவே இறந்திருக்கிறார்

தமிழையும் – தமிழ் தேசத்தையும் நேசித்த ஒருவரை போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை தூற்றாது ந்டக்கவேண்டும் . வாக்குக்களுக்காக ஆள்களை பயன்படுத்துவதும் அதன் பின்னர் அவர்களை துரோகிகாளாக மாற்ற முனையும் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும்.

வாக்குக்காக ஆள்களை பயன்படுத்துவதும் , பயன்படுத்தி முடிந்தவுடன் அவர்களை தூக்கி எறிவதுடன் மட்டுமல்லாது துரோகிகள் என சித்தரிக்கும் செயல்பாடுகளையும் தமிழ் தேசிய முன்னணியினர் நிறுத்தாத வரை அவர்கள் முன் வைக்கும் கொளகையான ” இரு தேசம் ஒரு நாடு ” என்பதன் ஆரம்ப புள்ளியை கூட அவர்களால் தொட முடியாது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!