போரை முடித்து வடக்கு மக்களுக்கு பீட்சா சாப்பிட வாய்ப்பை வழங்கினோம் – யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் தெரிவிப்பு

போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக சோறும், புட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என்று யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் மன்றுரைத்தார்.

அவரது கருத்துக்கு கடும் ஆட்சேபனை வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், “சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையை மீறி வடக்கு மாகாண மக்களை இழிவாகப் பேசுகிறார். 10 ஆண்டுகளாக மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் நான் வடக்கு மக்களைப் பேசுவதற்கு இவர் யார் எனக் கேட்கின்றேன்” என்றார்.

- Advertisement -

அதனால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைக் கண்டித்த மன்று, அவரைக் கட்டுப்படுத்தியது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயத்திக்கத்துக்குள் நாளை நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதிக்கு இடையே இலங்கை குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கிலேயே யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ, தனது சமர்ப்பணத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

“உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு வருடாந்தம் 365 நாள்கள் உள்ளன. ஏன் நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை மட்டும் நினைவுகூரவேண்டும். விடுதலைப் புலிகள் அமைப்பினால் கூறப்பட்டதனால்தான் அந்த வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்ட யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தியாக தீபம் திலீபன் உள்ளிட்டோருக்கு நினைவேந்தல் நடத்திய ஒளிப்படப் பிரதியை சான்றாக முன்வைத்தார்.

அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காணப்படுவதால் அவருக்குதான் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்யவேண்டும், ஏன் எங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்கின்றனர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!