போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் பற்றி தினமும் ஐந்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

வெளிநாட்டு வேலை ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களின் மோசடி தொடர்பான ஐந்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் நாளாந்தம் கிடைப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நபர்கள் தனிப்பட்ட மட்டத்தில் ஒரு வியாபாரமாகவும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

“தற்போது மக்கள் எந்த நாட்டிற்கும் செல்ல மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இந்த போலி முகவர்கள் இதை ஒரு நல்ல வாய்ப்பாக மாற்றி மோசடியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு பற்றுச் சீட்டு இல்லாமல் சிலர் பணம் செலவழித்துள்ளனர். இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படாதவை.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை மாத்திரமே வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும்.

எனவே, யாராவது வேலை வாய்ப்புகளை உறுதியளித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்து, தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தொடர்பு விவரங்களைப் பெறவும்.
இந்த முகவர் நிலையங்கள் சட்டபூர்வமானவையா இல்லையா என்பதைக் கண்டறிய வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்திலிருந்து நீங்கள் எப்போதுமே வழிகாட்டுதல்களைப் பெறலாம்.

முதல் சந்தர்ப்பத்தில் அத்தகைய முகவர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம்.

போலி முகவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, 24 மணி நேரமும் செயல்படும் ‘1989’ என்ற எண்ணை அழைப்பதன் மூலம் மக்கள் பணம் செலுத்துவதற்கு முன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதற்கு இந்த முகவருக்கு அனுமதி இருக்கிறதா என்று பார்க்க வாய்ப்பு உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் ஹோட்டல் தொழில் மற்றும் வீட்டு பராமரிப்பு சேவைகள் தொழில் போன்ற பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்க முடியும். ஆனால் அதற்கு முன், இலங்கை சட்டத்தின் கீழ் உங்களுக்கு சேவையை வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்” என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.