மகப்பேற்று வல்லுநரை சுட்டுப்படுகொலை செய்த புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு தூக்குத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
“எதிரியிடம் மீட்கப்பட்ட துப்பாகியின் ரவைகளும் மருத்துவரின் உடலிலிருந்து மீட்கப்பட்ட 4 ரவைகளும் ஒத்துள்ளதாக முன்வைக்கப்பட்ட சாட்சியத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பில் கோடிட்டுக் காண்டினார்.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி வவுனியா தனியார் மருத்துவமனைக்கு முன்பாக வைத்து மகப்பேற்று வல்லுநர் மொகமட் சுல்தான் மீரா முகைதீன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சிவநாதன் பிரேமநாத் அல்லது நெடுமாறன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றிருந்தனர்.
வவுனியா நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணை இடம்பெற்று வழக்கு மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டது.
எதிரிக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன. வழக்கு இன்று வியாழக்கிழமை தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டது.
“எதிரி மீதான குற்றச்சாட்டுக்களை பொலிஸ் மற்றும் நிபுணத்துவ சாட்சியங்கள் ஊடாக நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுனர் நிரூப்பித்துள்ளார். அதனால் எதிரியை குற்றவாளியாக மன்று இனங்காண்கின்றது” என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
கொலை செய்த குற்றத்துக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. ஜனாதிபதி தீர்மானிக்கும் தினத்தில் – இடத்தில் எதிரியின் உயிர் உடலிலிருந்து பிரியும் வரை தூக்கிலிடப்படுவார்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி தண்டனைத் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கை வழக்குத் தொடுனரான சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதிகள் தர்ஷிகா திருக்குமரநாதன், ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தினர்.
2006 முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியாவில் குற்றவாளியான நெடுமாறன் புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினராக செயற்பட்டதுடன் பல கடத்தல் கப்பம் கோரல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.