மக்களின் விருப்பத்துக்கு மாறாக அமையும் அரசில் நிதி அமைச்சை ஏற்க முடியாது – ஹர்ஷ டி சில்வா அறிக்கை

புதிய அரசில் நிதியமைச்சை பொறுப்பேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சைப் பொறுப்பேற்க கோரிக்கைகள் வந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக செல்ல முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹர்ஷ டி சில்வா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மக்களின் விருப்பத்திற்கு மாறாக உருவாகும் புதிய அரசில் நான் ஏன் இணையவில்லை என பலர் கேள்வி எழுப்பி வருவதால் இதனை தெளிவாக கூறுகின்றேன்.

தற்போதைய பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதை முதலில் சுருக்கமாக கூறுகிறேன்.

இந்நிலைமைக்கு இந்நாட்டில் காணப்படும் மோசமான அரசியல் கலாசாரமே முதன்மைக் காரணமாகும்.

நாடு, பொருளாதாரத் திட்டமிடல், கொள்கை போன்றவற்றின் மீது அக்கறை இல்லாத பதவி ஆசையும் வரப்பிரசாத மோகமும்தான் தற்போதைய இலங்கை அரசியல். வெவ்வேறு கதைகளைச் சொல்லி ஆட்சியைப் பிடிப்பது இவர்களின் பொழுது போக்கு. நான் அரசியலுக்கு வந்தது நேரமின்மையால் அல்ல.

இலங்கையை இவ்வுலகில் ஒளிரும் நட்சத்திரமாக மாற்றுவதற்கு எனது முழுமையான பங்களிப்பை வழங்குவதே எனது நோக்கமாகும்.
அதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மிகவும் நேர்த்தியான அரசியல் கலாச்சாரத்தை எதிர்பார்க்கிறார்கள். அதற்கு எதிராக என்னால் ஒருபோதும் செயல்பட முடியாது. பல கட்சிகள் என்னை நிதியமைச்சராக வருமாறு கேட்டன.

நான் அவர்களை ஏற்கவில்லை. இதுபோன்ற அரசியல் விளையாட்டை மக்கள் எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தை காக்க அரசியலில் ஈடுபடுவதை விட வீட்டிற்கு செல்வதே மேல்.

ஜனாதிபதியின் முடிவு நாட்டு மக்களின் விருப்பத்திற்கு அமைவாக இருந்திருக்க வேண்டும். அதற்காக ஜனாதிபதியுடன் பல தடவைகள் பேச்சு நடத்தியும் அவை வெற்றியளிக்கவில்லை.

அதிகார வர்க்கத்தைப் பாதுகாப்பதை விட புறக்கணிக்கப்பட்ட அதிகார வர்க்கத்தை தூக்கி எறிவதே இன்றைய தேவை. தனிப்பட்ட நலனுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க நான் ஒருபோதும் தயாராக இல்லை. இன்று ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அனைவரும் குரல் கொடுக்கின்றனர்.

அரசியல் சுயலாபத்திற்காக அதை மறைக்க முடியாது. சுயலாப அரசியலில் இருந்து நாட்டை பாதுகாத்து புனித நாட்டை கட்டியெழுப்புவோம் – என்றுள்ளது.