மக்கள் தகவல்களை பெறுவதைத் தடை செய்யும் வகையில் மின் தடையை ஏற்படுத்தி மின்சார சபை ஊழியர்கள் செயற்படமாட்டர்

இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு திங்கட்கிழமை (9) இரவு ஆரம்பித்துள்ள நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாளை மாலை வரை தொடரும் என தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும், நாளைய தினம் குறித்த தீர்மானம் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாவனையாளர் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலுவலகப் பணிகள், கட்டுமானப் பணிகள், மின் கட்டணப் பட்டியல் வழங்குதல் மற்றும் மின் கொடுப்பனவுகளைப் பெறுதல் போன்றவற்றை நிறுத்த தொழிற்சங்கம் முடிவு செய்திருந்தது.

“பெரிய முறிவுகள் மற்றும் பழுதுகள் மேற்கொள்ளப்படும். மேலும் நாட்டில் நிலவும் நிலமையை அறிய மக்கள் தங்கள் அலைபேசிகளை சமூக ஊடகங்களை அணுகுவதற்கு திட்டமிடப்பட்ட மின் தடைகளைத் தவிர்த்து தொடர்ச்சியான மின்சாரம் வழங்க முடிவு செய்துள்ளோம்” என்று ஜெயலால் கூறினார்.

திங்கட்கிழமை (09) அரசாங்க ஆதரவாளர்களால் கோத்தா கோ கம மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.