மன்னார் கால்பந்தாட்ட வீரர் பியூஸ்லெஸ் மாலைதீவில் உயிரிழப்பு

இலங்கை கால்பந்தாட்ட அணி வீரர் டக்சன் பியூஸ்லெஸ் நேற்று சனிக்கிழமை மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த இவர், இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்காக விளையாடி வந்தார்.

மாலைதீவிலுள்ள பிரபல கால்பந்தாட்ட அணி ஒன்றுக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாடி வந்த அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

மன்னாரை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட பியூஸ்லெஸ் உயிரிழக்கும் போது வயது 32.

அவரது உயிரிழப்புக்கான காரணம் வெளியிடப்படவில்லை.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற பியூஸ்லெஸ் பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் விளையாடும் வீரராக திகழ்ந்தார்.

இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகாண் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக்கொண்டார்.