மாகாண பயணத்தடையை ஒக்டோபர் 21 வரை கடுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி பணிப்பு

ஒக்டோபர் 21ஆம் திகதி வியாழக்கிழமை வரை நடைமுறையில் உள்ள மாகாண பயணக் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விடுமுறை நாள்களுடன் நீண்ட வார இறுதி என்பதால் அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்தை உன்னிப்பாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இன்று (15) காலை கோவிட்-19 ஒழிப்பு சிறப்பு செயலணியுடன் காணொளி மாநாட்டில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் 18-19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் அசேலா குணவர்தன தெரிவித்தார்.

ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் பாடசாலைகள் மற்றும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைகளில் இருந்து மற்ற மாவட்டங்களில் உள்ள 18 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார பரிந்துரைகளின்படி, பாடசாலை மாணவர்களுக்கு ஒரு அலகு மற்றும் நீண்ட நாள் நோய்கள் உள்ள மாணவர்களுக்கு இரண்டு அலகுகள் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

ஊசி போட்ட பின்னல் சுகாதாரப் பரிந்துரைகளின்படி பாடசாலை மாணவர்களுக்கு மூன்றாம் அலகு (பூஸ்டர்) கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் 6 லட்சம் அலகு ஃபைசர் தடுப்பூசி வரும் திங்கட்கிழமை வழங்கப்பட உள்ளதாகவும், கொள்வனவு கட்டளை வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்னும் பெறப்பட்டு வருவதாகவும் கோவிட்-19 செயலணி உறுப்பினர் பிரசன்ன குணசேன கூறினார்.

கோவிட் -18 உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும், நோயாளிகள் பதிவாகும் பகுதிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் தொடர்புடைய பகுதிகளை மேலும் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) மருத்துவ வல்லுநர் அனுருத்த படேனியா, கோவிட்-19 கட்டுப்பாட்டிற்காக சுகாதாரத் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வீட்டு தனிமைப்படுத்தல் செயல்முறை உலக சுகாதார நிறுவனத்தால் சிறப்பாகப் பாராட்டப்பட்டது என்று கோவிட் செயலணியிடம் கூறினார்.