மாறுவாரா… மாற்றம் தருவாரா… மாவை சேனாதிராசா மீதுள்ள எதிர்பார்ப்பு

உலகமே கோவிட் – 19 தொற்று நோய்க்கெதிரா போராடிக் கொண்டிருக்கிறது. அந்த நோயிலிருந்து எப்படி மக்களை காப்பாற்றுவது என்று சிந்தித்து கொண்டிருகிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கட்சிகளும் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் வழிமுறைகளை சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நம் அரசியல்வாதிகளும் கட்சிகளும் யார் அதிகாரம் மிக்கவர்கள், யார் தூய தமிழ் தேசியவாதிகள் என்று நிரூபிக்கப் போட்டி போடுகிறார்கள்.

நடந்து முடிந்த யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் தெரிவு போட்டியின் பின்னர் இது இன்னமும் சூடு பிடித்துள்ளது. மாநகர சபை முதல்வர் தெரிவு வாக்கெடுப்பில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ” அரசியல் நன்மைகளை பெற்று கொள்ள கூடியதான ” ஒரு முடிவை எடுத்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சிக்கும் – தமிழ் தேசிய முன்னணிக்கும் தாக்கத்தை உண்டு பண்ணக்கூடியதாக இருக்க தக்க முடிவான ” விஸ்வலிங்கம் மணிவண்ணனை” ஆதரிக்கும் முடிவை நோக்கி அவர் நகர்ந்திருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா எதிர்பார்த்து வீண் போகவில்லை என்பதே அதைத் தொடர்ந்து வந்த நாள்களில் நடைபெற்ற விடயங்கள் சொல்லி நிற்கின்றன.

அந்த வகையில் ” தமிழ் அரசுக் கட்சிக்கு” ஏற்படுத்திய தாக்கத்தை ஆராய விளைகிறது இந்த கட்டுரை.

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தற்பொழுது தமிழ் தேசிய அரசியலில் இருக்கும் தலைவர்களில் இரா.சம்பந்தனுக்கு அடுத்ததாக நீண்டகால அரசியல் அனுபவமும், வயதும் கூடியவராக இருக்கிறார். ஆனாலும் கட்சியின் தலைவராக, ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியாக முடிவுகளை எடுக்க தடுமாறுகிறார் அல்லது அவ்வாறான முடிவை எடுக்க முடியாத சூழ்நிலைக்குள் அவரை சிலர் தள்ளுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து 16 உறுப்பினர்கள் தெரிவாகி இருந்தார்கள். அப்போது தெரிவாகியிருந்தவர்களில் முதல்வரை யாராக போட்டியிட வைக்கலாம் என்பதில் தொடங்கிய இந்த தடுமாற்றம் அதை தொடர்ந்து வந்த பல சந்தர்ப்பங்களில் தொடரகிறது.

இம்மானுவேல் ஆனல்ட்டை முதல்வராக்க வேண்டும் என்று தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அவர் சார்ந்தோர் விரும்பினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக எம்.ஏ. சுமந்திரன் இருந்து வந்ததாலும், ஒப்பீட்டளவில் மற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட செயல்பட கூடியவருமாக இருந்து வந்தமையால், அவரின் செல்வாக்கு கட்சிக்குள் அதிகரித்து வந்தது. இது தமிழ் அரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தலைவர் மாவை சோ. சேனாதிராசா ஆகியோருக்கு அவ்வளவாக பிடித்திருக்கவில்லை. அதனால்தான் சுமந்திரனின் கைப்பிள்ளை போல இருந்த இம்மானுவேல் ஆனல்ட் முதல்வராக வருவதை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா விரும்பவில்லை.

இம்மானுவேல் ஆனல்ட் முதல்வராக வருவதை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னை நாள் கூட்டுறவு ஆணையாளராகவும் இருந்த சி.வி.கே. சிவஞானமும் விரும்பவில்லை. சீ.வி.கே. சிவஞானம், இம்மானுவேல் ஆனல்ட் முதல்வராவதை விரும்பாததுக்கு காரணம் அவருக்குள் இருந்த சமூகப் பாகுபாடே காரணம். அதனை அவர் ஆனல்ட்டிடம் நேரடியாகவும் தெரிவித்திருந்தார்.

எனவே கூட்டுறவாளராக , சமுக சேவையாளராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சொலமன் சிறிலை முதல்வராக்க வேண்டும் என்று மாவை சோ.சேனாதிராசா மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் விரும்பினார்கள்.

இந்த இழுபறியில் முந்திக் கொண்டு இம்மானுவேல் ஆனல்ட்தான் முதல்வர் என்று கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்த சுமந்திரன் தன்னிச்சையாக அறிவித்தார். இது தமிழ் அரசுக் கடசிக்குள் சல சலப்பை ஏற்படுத்தியது. சொலமன் சிறில் கூட அதிருப்திக்குள்ளானார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் தலையிட்டிருந்ததாலும் சுமந்திரன் சொலமன் சிறிலை சமாதானப்படுத்தியதாலும் இறுதியில் இம்மானுவேல் ஆனல்ட்டே முதல்வரானார்.

அதன் பின்னர் சில சந்தர்ப்பங்களில் சுமந்திரன் கட்சியின் தலைவர்களோடு கலந்தாலோசிக்காமலேயே சில முடிவுகளை அறிவித்தததும் பின்னர் அவை சர்ச்சைகளுக்குள்ளாகியதும், பின்னர் இரா.சம்பந்தன் தலையிட்டு பிரச்சினைகள் எழாமல் தீர்த்து வைத்ததும் நடந்தன.

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் தெரிவுகளிலும் தமிழ் அரசுக் கட்சி தலைவர் மாவை சோ.சேனாதிராசா தான் நினைச்ச முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறினார் . அதன் போதும் எம்.ஏ.சுமந்திரன் சில பரிந்துரைகள் செய்ய முற்பட்ட வேளையில் அதனை கருத்தில் எடுப்பதா ? அல்லது கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்கள் சொல்வதை கருத்தில் எடுப்பதா என்று தடுமாறினார். இந்த இரண்டு முரண்பட்ட கருத்துக்களையும் தவிர்த்து , தானாக ஒரு முடிவை எடுக்கவும் முடியாமல் இரண்டு தரப்பையும் சமநிலை படுத்தும் விதமாக முடிவுகளை எடுக்க முனைந்தார்.

இதுவே அவரின் பலவீனம் ஆகும். ஒரு பாரம்பரிய கட்சி ஒன்றின் தலைவராக , நீண்ட கால அனுபவமுள்ள அரசியல்வாதியாக தான் நினைக்கும் முடிவுகளை அவர் எடுக்க தவறுவது இன்று அவரது பதவியையே கேள்விக்குறியாக்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்குது. அவரின் பக்கம் நிக்கிறோம் என்று சொல்லி கொள்பவர்கள் மெல்ல மெல்ல தாங்கள் நினைக்கும் சில முடிவுகளை அவரை எடுக்க வைக்கிறார்கள்.

அத்தகைய முடிவு ஒன்றே, தற்பொழுது நடந்த யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் தெரிவு போட்டிக்கு இம்மானுவேல் ஆனல்ட்டையே நிறுத்துவது என்கிற முடிவு. ஏற்கனவே மூன்று தடவை பாதீடு தோல்வியடைந்த நிலையில், மீண்டும் இம்மானுவேல் ஆனல்ட்டை நிறுத்தாமல் வேறு ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதே சுமந்திரனின் விருப்பமாக இருந்தது. ஆனால் சுமந்திரன் இம்மானுவேல் ஆனல்ட்டை பழிவாங்கும் முகமாகவே இதைச் சொல்கிறார் என்று மாவை சேனாதிராசாவை நம்பவைத்தார்கள் அவருடன் இருந்தவர்கள்.

இதில் உண்மையில்லாமலும் இல்லை. சிலவேளை சுமந்திரனுக்கு அந்த எண்ணமும் இருந்திருக்கலாம். ஏனெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சுமந்திரன் தெரிவித்த கருத்தொன்று சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து, அவருக்கெதிராக கட்சிக்குள்ளும் , வெளியேயும் பலத்த எதிர்ப்பு அலையொன்று எழுந்தது. அப்போது இம்மானுவேல் ஆனல்ட் தனது எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தார். தேர்தலின் போது அந்த முறுகல் இன்னும் கொஞ்சம் விரிசலாகியிருந்தது.
அதன் பின்னர் அவர்களிடையே சுமூகமான உறவு இருக்கவில்லை

எனவே மாவை சேனாதிராசா தான் விரும்பிய முடிவை தவிர்த்து, அருகில் இருந்தவர்கள் வழிநடத்தி சென்ற முடிவை, அதாவது சுமந்திரன் சொல்கிற படி நடந்தால் சுமந்திரன் செல்வாக்கு அதிகரித்துவிடும் என்று அவர்கள் கூறியதை கேட்டு, ஆனல்ட்டை முதல்வராக்கும் முடிவை எடுத்தார்.

இந்த நிலையில்தான் முதல்வர் போட்டியில் இம்மானுவேல் ஆனல்ட்டை எதிர்த்து போட்டியிட்ட விஸ்வலிங்கம் மணிவண்ணனை ஆதரிக்கும் முடிவை டக்ளஸ் தேவானந்தா எடுத்தார். விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரானார் .

தான் சொன்னதை கேட்காமல், கட்சி தலைவர் முடிவு எடுத்துட்டார் என்று கூறி சுமந்திரன் கட்சி தலைவருக்கு காட்டமாக கடிதம் எழுதினார். இதில் வியப்பு என்னவென்றால் 2018 இல் கட்சி தலைவருக்கு தெரியாமலே முடிவை அறிவித்த சுமந்திரன் , இன்று கட்சி தலைவர் தான் தோன்றிதனமாக முடிவெடுத்துவிட்டார், அதனால்தான் தமிழ் அரசுக் கட்சியிடமிருந்து யாழ்ப்பாணம் மாநகர சபை பறிபோனது என்று பொதுவெளியில் குற்றம் சாட்டினார்.
கட்சி கூட்டம் ஒன்றில் பேச வேண்டிய விடயமொன்றை பொதுவெளிக்கு கொண்டு வந்ததுக்கு பின்னால் கட்சியின் தலைமையை கேள்விக்குட்படுத்தும் உள் நோக்கம் இருந்திருக்கலாம்.

அதனை தொடர்ந்து மாவை சேனாதிராசா, சுமந்திரன் கட்சிக்குள் பேச வேண்டிய விடயத்தை வெளியில் பேசுகிறார் என்றும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் செயல் என்றும் அறிக்கை விடுகிறார் . ஏற்கனவே சுமந்திரன் மேல் கோபத்தில் உள்ளவர்கள் எல்லோரும் கட்சி தலைவர் பக்கமா நிற்கிறார்கள். கட்சியின் ஒட்டுமொத்த பின்னடைவுக்கே காரணம் சுமந்திரன் என்கிறார்கள்.

சுமந்திரனை ஆதரிக்க கூடியவர்கள் மாவை சேனாதிராசா ஆளுமை இல்லாதவர், அவர் பதவி விலக வேண்டும் என்கிறார்கள்.

இவ்வளவு காலமும் நீறு பூத்த நெருப்பாக இருந்த உட்கட்சி பிரச்சனையை டக்ளஸ் தேவானந்தா எடுத்த முடிவானது ஊதி பெருப்பித்திருக்கிறது.

இந்த முறையாவது தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தான் நினைக்கும் முடிவை எடுப்பாரா? அல்லது மற்றவர்கள் வழி நடத்தும் முடிவை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எது எப்படியோ, தற்போதைய சூழ்நிலையில், தமிழ் இனத்தின் பாரம்பரிய கட்சியான தமிழ் அரசுக் கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி மாவை சேனாதிராசாவைவிட தற்போது வேறு எவருக்கும் இல்லை என்பதே கசப்பான உண்மை ஆகும்.