மாவட்ட நீதிபதி மா. கணேசராஜா, மூத்த சட்டத்தரணி ஏ.சி.பெல்டானோ இருவருக்கும் மன்னாரில் மதிப்பளிப்பு

மன்னார் மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, திருகோணமலை மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் பெற்றுச் செல்வதை முன்னிட்டு அவரை மதிப்பளித்து மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தினால் பிரியாவிடை வைபவம் இன்று நடத்தப்பட்டது.

அத்துடன் இந்த நிகழ்வுடன் மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் மூத்த சட்டத்தரணி ஏ.கயஸ் பெல்டானோ, சட்டத்துறையில் 57 ஆண்டுகள் வழங்கிய சேவையை மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

மன்னார் தனியார் நட்சத்திர விடுதியில் இந்த நிகழ்வு இன்று திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, 2 ஆண்டுகளை அண்மித்த சேவையை மன்னார் மாவட்டத்தில் வழங்கி வருடாந்த இடமாற்றமத்தின் ஊடாக திருகோணமலை மாவட்ட நீதிபதியாக வரும் ஏப்ரல் 5ஆம் திகதி மாற்றலாகிறார்.

மன்னார் மாவட்ட மூத்த சட்டத்தரணிகள் எம்.எம்.சபுறுதீன், ஜூனைஸ் பாரூக் ஜெபநேசன் லோகு, பி.டெனிஸ்வரன் உள்ளிட்டோரும் இளநிலை சட்டத்தரணிகளும் பங்கேற்று மாவட்ட நீதிபதி மா.கணேசராஜா, மூத்த சட்டத்தரணி ஏ.கயஸ் பெல்டானோ ஆகியோரின் சேவைகளை எடுத்துரைத்தனர்.

மன்னார் மாவட்ட நீதிபதி மா.கணேசராஜாவின் நீதிச் சேவை மாவட்ட மக்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று சட்டத்தரணிகள் தமது உரைகளில் தெரிவித்தனர்.

மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று மீளவும் மன்னார் மாவட்டத்துக்கு மீளவும் நீதிபதி மா.கணேசராஜா வருகை தரவேண்டும் என்றும் சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டனர்.

மூத்த சட்டத்தரணி ஏ.கயஸ் பெல்டானோ, மன்னார் மாவட்டத்தின் சட்டத்துறையின் முன்னோடியாகவும் இளநிலை சட்டத்தரணிகளின் வளர்ச்சியிலும் பங்களிப்புச் செய்தார் என்று சட்டத்தரணிகள் எடுத்துரைத்தனர்.

சட்டத்துறையில் நடமாடும் அறிவுக் களஞ்சியமாக மூத்த சட்டத்தரணி ஏ.சி. பெல்டானோ விளங்குகின்றார் என்றும் அவரது 60 ஆண்டுகள் சட்டத்துறை சேவையை மதிப்பளிக்கும் மாபெரும் விழா 3 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் என்றும் சட்டத்தரணிகள் தமது உரைகளில் கூறினர்.

“என்னை மகன் என்று எனது சட்டத்தரணி ஆரம்ப காலத்தில் நீதிபதி ஒருவர் அழைத்தார். அதன் பின்னர் என்னை அப்பா என நீதிபதி ஒருவர் அழைத்தார். விரைவில் நீதிபதி ஒருவர் என்னை தாத்தா என அழைக்கவேண்டும் என்பது எனது விருப்பாகும்.

எனது ஆரம்ப கால சட்டத்துறை பயணம் கடிமாக அமைந்தது. நாட்டில் மீன்பிடித் துறை மற்றும் காணி உரிமம் காலவரையறை என இரண்டு சட்டவரைவுகள் நாடாளுமன்றுக்கு வருவதற்கு எனது பங்களிப்பு இருந்தது.

சட்டத்துறை தொடர்பில் தமிழில் ஒரு புத்தகத்தை விரைவில் எழுதி வெளியிடுவேன்” என்று மூத்த சட்டத்தரணி ஏ.கயஸ் பெல்டானோ, ஏற்புரையில் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட நீதிபதி மா.கணேசராஜா தனது ஏற்புரையில் தெரிவித்ததாவது;

நான் மருத்துவத் துறையில் மேற்படிப்பைத் தொடர எதிர்பார்த்திருந்த எனக்கு அப்போது யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட சூழல் என்னை அந்த துறையிலிருந்து தடுத்துவிட்டது.

எனினும் எனது தந்தையின் வழிகாட்டலில் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்குத் தோற்றி சட்டத்துறைக்கு தெரிவாகினேன்.

நான் சட்டத்தரணிகளை மதிப்பதற்கான காரணம் நீதிபதியாக நான் வந்ததே அந்த துறையின் ஊடாகத்தான். எனவே நீதிபதியாக ஆன பின்னரும் மற்றையவர்களை மதிப்பளிக்கவேண்டும்.

அந்த வகையில்தான் மூத்த சட்டத்தரணி ஏ.கயஸ் பெல்டானோவின் 50 ஆண்டுகள் கடந்த சட்டத்துறை சேவையை மதிப்பளித்து விழா எடுக்க வேண்டும் உங்களுக்கு ஆலோசனை வழங்கினேன்.

நான் மன்னாருக்கு வந்து சேவையாற்றியதை பெருமையாகவும் வரமாகவும் எடுத்துக் கொள்கின்றேன். பல லட்சம் பக்தர்கள் வந்து வணங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயம், மடுமாதா தேவாலயம் என்பன இந்த மாவட்டத்தில்தான் உள்ளன.

அடுத்து மாற்றலாகிச் செல்லும் திருகோணமலை மாவட்டமும் எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம் – என்றார்.

நிகழ்வில் மன்னார் அரச சட்டவாதி தர்ஷிகா திருக்குமரநாதன், மன்னார் மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் கந்தசாமி நவநீதன், மேல் நீதிமன்றப் பதிவாளர் சிவகாமி குருபரன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.