மீண்டும் சறுக்கியது யாழ். பல்கலை. பேரவை; கலாநிதி குருபரனின் வழக்கில் அவருக்கு எதிராக நிலைப்பாடு எடுப்பது எனத் தீர்மானம்

0

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (செப்.26) கூடிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை தனது முந்தைய தீர்மானத்தை மாற்றி கலாநிதி. கு. குருபரன் தொடுத்த வழக்கில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் நிலைப்பாட்டோடு ஒத்துப்போவது என்ற புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இராணுவத்தின் அழுத்தத்தினால் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் வழக்குகளில் ஏற்படக் கூடாது என்ற ஆணைக்குழு கடந்த செப்டெம்பர் தீர்மானமெடுத்தது. அதற்கெதிராக கலாநிதி. குருபரன், அடிப்படை உரிமை மனுவைத் தொடர்ந்து குறித்த வழக்கு உயர்நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.

கடந்த ஜூன் 30ஆம் திகதி உயர் நீதிமன்றில் பல்கலைக்கழகத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இ. தம்பையா, கலாநிதி. கு. குருபரன் தனது மனுவில் கோரப்பட்ட இடைக்காலக் கட்டளை வழங்குவதையோ வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதையோ பல்கலைக்கழகம் ஆட்சேபிக்காது என்று தெரிவித்திருந்தார். தான் எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டை அவர் எழுத்துமூலம் பேரவைக்கு சமர்ப்பித்திருந்தார். அது பேரவையின் கடந்த ஜூலை 3ஆம் திகதிய 444 ஆவது பேரவைக் கூட்டத்தின் அறிக்கைப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டது.

தற்போது காரணம் எதுவும் தெரிவிக்காமல் தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றி பலக்லைக்கழக மானிய ஆணைக்குழுவின் நிலைப்பாட்டோடு நீதிமன்றில் ஒன்றாக பிரயாணிப்பது எனப் பேரவை முடிவு செய்துள்ளது.

பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் பேராசிரியர். சிறீசற்குணராஜா இந்த நிலைப்பாட்டை பேரவைக்கு அறிவித்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதியன்று கூடிய பல்கலைக்கழக சட்ட விவகாரகளுங்குக்கான குழுவின் முடிவின் அடிப்படையிலேயே தான் இதனை அறிவிப்பதாக பேராசிரியர் சிறீசற்குணராஜா பேரவைக்கு தெரிவித்திருந்தார். குறித்த சட்ட விவகாரகளுங்குக்கான குழுவின் கூட்டத்தில் வேண்டுமென்றே பல்கலைக்கழக சட்ட விவகாரகளுங்குக்கான குழுவின் உறுப்பினரான சட்டத் துறைத் தலைவர் திருமதி துஷானி சயந்தன் அழைக்கப்படவில்லை என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.

குறித்த தீர்மானத்தை அவர் எதிர்க்கக் கூடும் என்ற காரணத்திற்க்காகவே அவர் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லையா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கலாநிதி. கு. குருபரனின் வழக்கு உயர் நீதிமன்றில் கடந்த செப்டெம்பர் 09 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 3 1/2 மணித்தியாலங்களுக்கு மேல் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதிமன்ற அமர்விற்கு முன் கலாநிதி. குருபரனின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி க. கனகேஸ்வரன் வாதங்களை முன்வைத்தார்.

பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கலாநிதி குருபரனின் சட்டத் தொழில் ஆற்றும் கடமையில் இருந்து அவரைத் தடை செய்ய முடியாது என்றும் அதனை செய்வதாயின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே செய்யலாம் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மிக விரிவாக வாதம் செய்திருந்தார். இந்த வாதத்தை முறியடிப்பதற்காகவே தற்போது மானிய ஆணைக்குழு பேராசிரியர் சிறீசற்குணராஜாவுக்கு அழுத்தம் கொடுத்து ஆணைக்குழுவின் முடிவை ஆதரிக்கும் தீர்மானத்தை பேரவையில் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சென்ற தவணையின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்தரணி இ. தம்பையா தனிப்பட்ட காரணங்களுக்காக தான் தோன்ற முடியவில்லை எனத் தனது இளநிலை சட்டத்தரணி மூலம் உயர் நீதிமன்றிடம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் விவாதத்தை தொடங்குவது என பிரதம நீதியரசர் முடிவு செய்திருந்தார். மனுதாரரின் சட்டத்தரணியின் தொடர் வாதத்திற்காக வழக்கு நவம்பர் 16ஆம் திகதிக்கு நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனது முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த 16 ஜூலை 2020 பல்கலைக்கழகத்திற்கு கலாநிதி. குருபரன் வழங்கிய முன்னறிவித்தல் எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதியன்று முடிவிற்கு வருகின்றது. அன்று கலாநிதி குருபரனின் பதவி துறப்பு முடிவு நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.