விபத்தில் படுகாயமடைந்த யாழ்ப்பாணம் மூத்த சட்டத்தரணியும் யாழ்ப்பாணம் மாநகரசபையின் உறுப்பினருமான முடியப்பு றெமீடியஸ் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 8ஆம் திகதி புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் அவர் படுகாயமடைந்தார்.
வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதியே விபத்திற்கு உள்ளான சமயம் தலைக் கவசம் கழன்றமையினால் தலையில் பலத்த காயமடைந்தார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி றெமீடியஸுக்கு விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தில் போர் காலப்பகுதியில் இளையோர்கள் கடத்தப்படல் மற்றும் படுகொலை செய்யப்பட்ட போது துணிச்சலுடன் மனித உரிமைகளுக்காக செயற்பட்டவர் மூத்த சட்டத்தரணி மு.றெமீடியஸ். அப்போது அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலக சட்டத்தரணியாகவும் கடமையாற்றியிருந்தார்.