மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் என்.பி.பி.டி.எஸ. கருணாரத்னவை நியமிப்பதற்கு அரசமைப்பு சபை ஏகமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர், நீதியரசர் கே.பி. பெர்னாண்டோவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கும் அரசமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.
சபாநாயகர் தலைமையிலான அரசமைப்பு சபை இன்று கூடியது. மேற்படி நியமனங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த பரிந்துரைக்கே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பி.தெஹிதெனிய ஓய்வுபெற்றதையடுத்து வெற்றிடமாக இருந்த பதவிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் கே.பி.பெர்னாண்டோவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்குமாறு ஜனாதிபதியின் பரிந்துரையை அரசமைப்பு சபை பரிசீலித்தது.
மேற்படி பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.
இதன் விளைவாக ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆர்.மரிக்கார், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமனம் செய்யப்படுவதற்கு சபை ஏகமனதாக ஒப்புதல் அளித்தது.
அரசியலமைப்பின் 41பி பிரிவின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களாக நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை கோரும் விளம்பரத்தை 2023 பெப்ரவரி முதலாம் திகதி பத்திரிகைகளில் வெளியிடுவதற்கு அரசமைப்பு சபை மேலும் தீர்மானித்தது.
விண்ணப்பத்தின் வரைவு வடிவம் அதிகாரப்பூர்வ நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 15 பெப்ரவரி 2023 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.