யாழ்ப்பாணம் தென்னிந்தியத் திருச்சபையின் தலைமை அலுலவரின் பொறுப்பதிகாரி நியமனம் மீளப்பெறப்பட்டது; 9 நாள்களிலேயே சுறுசுறுப்பானார் பேராயர்

தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணம் ஆதீனத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி டானியல் தியாகராஜா, அண்மையில் நோயுற்றுத் தற்போது குணமடைந்து வரும் நிலையிலே, அவருக்கு 3 மாத விடுப்புக் கோரி அவரின் பாரியார் தென்னிந்தியத் திருச்சபையின் சினோட்டுக்கு கடந்த 21ஆம் திகதியன்று கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தின் அடிப்படையில் பேராயருக்கு மூன்று மாதம் மருத்துவ விடுப்பு வழங்கியும், பேராயர் திரும்பவும் குணமடையும் வரையில் தலைமை அலுவலரின் பொறுப்பதிகாரி ஒருவரை யாழ்ப்பாணம் ஆதீனத்தின் நிருவாகத்துப் பொறுப்பாக நியமித்தும் கடிதம் ஒன்றினைத் தென்னிந்தியத் திருச்சபையின் தலைமை அலுவலர் அதி வணக்கத்துக்குரிய தர்மராஜ் இராசாலம் நேற்றுமுன்தினம் அனுப்பி இருந்தார்.

ஆனால் அந்த நியமனம் உடனடியாக மீளப் பெறப்படுவதாகவும், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணம் பேராயார் அதி வண கலாநிதி டானியல் தியாகராஜா தற்போது இயங்கக் கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்து மறுநாளான நேற்று மற்றொரு கடிதத்தினை தலைமை அலுவலர் அனுப்பியுள்ளார்.

31ஆம் திகதி எழுதப்பட்ட கடிதத்திலே 30ஆம் திகதி யாழ்ப்பாணம் பேராயத்தின் பேராயர் டானியல் தியாகராஜா தனக்கு எழுதிய கடிதத்தினை மேற்கோள்காட்டி இருக்கிறார். இதன் பிரகாரம் 21ஆம் திகதி 3 மாத மருத்துவ விடுப்புத் தேவைப்பட்ட பேராயர் தியாகராஜா வெறும் ஒன்பதே நாட்களில் தனது கடமைகளைச் செய்யும் நிலைக்கு மருத்துவ ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ளார் என்பதனை ஊகிக்கக் கூடியதாக உள்ளது.