யாழ்ப்பாணம் மாநகர கடைகள் மற்றும் மதுபான சாலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 63 வயதுடைய முதியவர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு கடை ஒன்றை உடைப்பதற்கு சென்ற வேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
கடந்த சில தினங்களுக்கு முன் யாழ்பபாணம் நகரில் உள்ள மதுபான சாலை இரவு வேளையில் உடைக்கப்பட்டு திருட்டு இடம்பெற்றது. அதன்பின்னர் பலசரக்கு கடை ஒன்று உடைக்கப்பட்டு 3 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட் என்பன திருடப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, பொலிகேவா வசந் தலமையிலான குழு நேற்றையதினம் மேலும் ஒரு கடை உடைப்பதற்காக சுத்தியல் சாவிகள் உடன் பை ஒன்றை கொண்டு சென்ற சந்தேக நபரை கைது செய்தனர்.
சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஏனைய திருட்டு சம்பவங்கள் மேற்கொண்டமை தொடர்பில் தெரியவந்துள்ளது.