Saturday, September 23, 2023
Homeஉள்ளூர் செய்திகள்யாழ். பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்

யாழ். பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என அறிய வருகிறது. 

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் நேற்று முன்தினம் – 02ஆம் திகதி வெள்ளிக்கிழமையாகும்.

அன்றைய தினம் பிற்பகல் 3 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மூவரும், கிழக்குப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ. கண்ணதாசன் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இருந்தும், விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். 

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய எதிர்வரும் ஜூலை மாத முற்பகுதியில் நடாத்தப்படவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் முன்னிலையில்  தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில்  முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். 

பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்து துணைவேந்தராக ஜனாதிபதி பிரகடனம் செய்வார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular