Wednesday, December 6, 2023
Homeஉள்ளூர் செய்திகள்யாழ். பல்கலை. பொறியியல் பீடத்துக்குத் தெரிவான மாணவர்களை உடனடியாக அனுமதிக்கவேண்டும்-மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பணிப்பு

யாழ். பல்கலை. பொறியியல் பீடத்துக்குத் தெரிவான மாணவர்களை உடனடியாக அனுமதிக்கவேண்டும்-மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பணிப்பு

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்குக் காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திறமை ஒழுங்கில் வெற்றிடங்களை நிரப்பும் முகமாகத் தெரிவு செய்யப்படும் மாணவர்களைப் பதிவு செய்வதற்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பும் அதிகாரம் பீடாதிபதிகளுக்கு இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைக்குத் தோற்றி, அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் வெட்டுப் புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் முதற் பட்டியலின் படி 2021/2022 கல்வி ஆண்டுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன.

எனினும், உயர்தரப் பெறுபேறுகளின் மீளாய்வுக்குப் பின்னர், வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவர்களை வெற்றிடங்களை நிரப்பும் பட்டியல் மூலம் அனுமதிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.

ஆனாலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் காணப்படும் வளப்பற்றாக்குறை காரணமாக 2021/2022 கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களே ஆயினும், 2021/2022 கல்வி ஆண்டுப் பிரிவினருடனேயே அவர்கள் கல்வி கற்க முடியும் என மாணவர்கள் அனுமதிக்காகப் பதிவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்தே அனுமதிக்கப்படும் மாணவர்களின் பதிவை நிராகரிக்கும் அதிகாரம் பீடாதிபதிக்கு இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொறியியல் பீடத்தினால் அனுமதிக்கப்படக் கூடிய மாணவர்களின் தொகை என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கைக்கு உட்பட்டே வெற்றிடங்கள் நிரப்பும் பட்டியலும் தயாரிக்கப்படுகிறது.

அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை அனுமதிப்பதில்லை எனப் பீடம் முடிவெடுக்க முடியாது. மானியங்கள் ஆணைக்குழுவினால் தெரிவு செய்யப்படும் மாணவர்களை அனுமதித்தே ஆக வேண்டும். அனுமதிக்க முடியாத நிலமை இருந்தால் பட்டியல் தயாரிக்கப்படுவதற்கு முன்னர் பீடாதிபதி அது பற்றி ஆணைக்குழுவுக்கு அறிவித்திருக்க வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் மூத்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular