யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாளர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை – பின்னணி என்ன?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் அதிதிறன் அலைபேசியைப் பயன்படுத்த வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தடைவிதித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் உள்ளக சுற்றறிக்கை ஒன்றை அனைத்துப் பிரிவுகளுக்கும் அனுப்பிவைத்துள்ளார். இன்று டிசெம்பர் முதலாம் திகதி தொடக்கம் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணியாளர்கள் கடமை நேரத்தில் அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்ற நடைமுறை ஏற்கனவே உள்ளது. எனினும் அது சீராக நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக நோயாளர்கள் மத்தியில் அலைபேசிப் பயன்பாட்டுக்கு வைத்தியசாலைகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் தற்போதைய அறிவிப்பை பலரும் வரவேற்றுள்ளனர். பலர் சமூக ஊடகங்களில் மருத்துவர் த.சத்தியமூர்த்திக்கு பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.

இந்த முடிவுக்கு வருவதற்கு
பின்னணி என்ன?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 4 வயது பெண் சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
4 வயது பெண் குழந்தை அவரது தாயாரால் கடந்த மாதம் 12ஆம் திகதியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை 21ஆம் நோயாளர் விடுதியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. குழந்தைக்கு அந்தரங்க உறுப்பிலிருந்து குருதி வெளியேறியுள்ளது.

அதனால் குழந்தை சட்ட மருத்துவ அதிகாரியின் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார். பெண் குழந்தை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார் என்று சட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டதும் தாயார் தனது குழந்தை அழைத்துக் கொண்டு தப்பிக்க முற்பட்டுள்ளார். எனினும் வைத்தியசாலையின் பணியாளர்களின் நடவடிக்கையால் தாயாரின் தப்பிக்கும் முயற்சி தடைப்பட்டது.

குழந்தையின் தந்தை வெளிநாட்டில் உள்ளார். தாயாரின் நடத்தை தவறானது. அவருடன் தொடர்புள்ளவரே குழந்தையைத் துன்புறுத்தியுள்ளார் என்பது வைத்தியசாலைப் பணியாளர்களுக்குத் தெரியவந்தது.

அதனால் அந்தத் தாயாரை தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனது அலைபேசியில் படம் பிடித்துள்ளார். அந்தப் படம் இணையத்தளங்களில் வெளிவந்தன. அதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தத் தாயாரில் தவறு உள்ளபோதும் அவரைப் படம் எடுத்து வெளியிடுவது இயற்கை நீதிக்கு பிழையானது. எனினும் குழந்தை பாலியல் ரீதியாக வதைப்பட்ட விடயத்தை மூடி மறைத்தமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தையே சாரும்.

அதுதொடர்பில் மேற்கொண்ட சட்ட நடவடிக்கை எடுக்க யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரும் சட்ட மருத்துவ அதிகாரியும் தவறிவிட்டனர் என்பது கவலையளிக்கும் விடயமாகும்.

இவ்வாறான சமூகப் புரள்வுகள் மூடி மறைக்கப்படுவது – குற்றவாளிகள் காப்பாற்றப்படுவதால்தான் குற்றச்செயல்களும் அதிகரிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here