யாழ்ப்பாணம் மாநகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் இரண்டு சீல் வைத்து மூடப்பட்டன.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி, மருத்துவர் பாலமுரளியின் அறிவுறுத்தலில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் மாநகர் பகுதி உணவகங்கள் திடீர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய யாழ்ப்பாணம் மைய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள அசைவ உணவகமும், யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள அசைவ உணவகமும் பொது சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையில் பல்வேறு சுகாதார சீர்கேடுகளுடன் இயங்குகின்றமை கண்ணறியப்பட்டது.

இரண்டு உணவக உரிமையாளர்களிற்கும் எதிராக இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்குகள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.
வழக்குகளை விசாரணை செய்த மேலதிக நீதிவான் உணவக உரிமையாளர்களை தலா ஒரு லட்சம் ரூபா பிணை முறியில் விடுவித்ததுடன், குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களை சீல் வைத்து மூடுமாறு கட்டளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகங்கள் இரண்டும் இன்று சீல் வைத்து மூடப்பட்டன.