யாழ். மாநகர சபையுடன் முட்டிமோதும் கேபிள் ரிவி நிறுவனத்துக்கு ஊடக அமைச்சின் உரிமம் இல்லை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது எனக் கூறப்படும் தொலைக்காட்சி அலைவரிசை இணைப்பு (Cable TV) நிறுவனத்துக்கு கேபிள் இணைப்பு வழங்குவதற்கான உரிமம் வழங்கப்படவில்லை என ஊடகத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உள்ள அரசியல் கட்சி உறவை வைத்துக்கொண்டு அவரது கட்டுப்பாட்டின் கீழ் வரும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் கேபிள் ரிவி நடாத்துவதற்கான உரிமத்தைப் பெற்றுக்கொண்டு இந்த அந்த நிறுவனம் சேவையில் ஈடுபடுவது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்துக்கு தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள உரிமத்தின் கேபிள்களுக்கான தூண்களைப் போடும்போது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களிடம் முறையான அனுமதியைப் பெற்றுத்தான் கம்பங்களை நடவேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நிபந்தனைகளையும் மீறி உள்ளூராட்சி அமைப்புக்களின் அனுமதி பெறப்படாது சட்டத்துக்குப் புறம்பாக அந்த நிறுவனம் தன்னிச்சையாக வீதிகளில் தூண்களை நிறுவிவருகின்றது என்று யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தெரிவித்திருந்தார்.

இவ்வவாறு சட்டத்துக்குப் புறம்பாக நடப்படும் கம்பங்களும் ஏற்கனவே மின்சாரசபையால் பயன்படுத்தப்பட்டு பாவனைக்கு உகந்தவை அல்ல என்று அப்புறப்படுத்தப்பட்ட பழைய தூண்களையே மிக மலிவுவிலையில் வாங்கி அவற்றையே பிரதான வீதிகளில் நாட்டுவருகின்றனர் என்றும் முதல்வர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இவ்வாறு யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் நடப்பட்ட கம்பங்கள் மாநகர முதல்வரால் அகற்றப்பட்டன.

அதுதொடர்பாக அவருக்கு எதிராக கேபிள் நிறுவனத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அந்த முறைப்பாடு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் கம்பங்களை அகற்ற யாழ்ப்பாண மாநகர முதல்வருக்கு அதிகாரம் உண்டு என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில்  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆட்சேபித்து கேபிள் நிறுவனம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுத் தாக்கல் செய்த்து.

கேபிள் ரிவி நடாத்துவதற்கு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் அணைக்குழுவின் உரிமம் மட்டும் போதுமானதல்ல. ஊடக அமைச்சின் உரிம்மும் உள்ளூராட்சி சபைகளின் அனுமதியும் இருக்கவேண்டும்.

ஊடக அமைச்சு இன்னமும் அவர்களுக்கு கேபிள் ரிவி நடாத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது அண்மையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல் மூலம் தெரியவந்திருக்கின்றது.

கடந்த ஜனவரி முதல் இவர்கள் கேபிள் ரிவியை நடாத்திவருகின்றனர். அப்படியிருக்க கடந்த மார்ச் முதலாம் திகதி ஊடக அமைச்சு இவர்களுக்கு கேபிள் ரிவி நடாத்துவதற்கான உரிமத்தை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமது நிறுவனத்துக்கு ஊடகத்துறை அமைச்சின் உரிமை வழங்கப்பட்டுள்ளது என அந்த நிறுவனத்தின் முகாமைத்துவம் முதல்வனிடம் தெரிவித்தது. அதுதொடர்பில் அந்த நிறுவனத்தின் முகாமைத்துவத்தால் உரிமம் எனக் கூறப்பட்ட சான்றிதழின் முகப்புப் பக்கத்தின் ஒளிப்படமும் அனுப்பிவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here