யாழ்ப்பாணம் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் செயலாளர் அஜித்குமார் ஆகியோர் அந்தப் பதவிகளில் செயலாற்ற யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் கட்டாணை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் நிர்வாக உறுப்பினரான பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறை தாக்கல் செய்த வழக்கிலேயே இந்த கட்டாணை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றினால் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்டது.
அந்த வழக்கில் யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் இம்மானுவேல் ஆனல்ட், செயலாளர் அஜித்குமார் மற்றும் பொருளாளர் ஆகியோர் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பின்படி தலைவர் மற்றும் செயலாளர் இரண்டு தடவைகளுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது என்றும் யாப்புக்கு புறம்பாக பதவிகளைப் பிடித்திருக்கும் ஆனல்ட் மற்றும் அஜித்குமாரை உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளிலிருந்து நீக்கி கட்டளையிடுமாறு வழக்காளி கோரியுள்ளார்.
அத்துடன் தலைவர் பதவிக்கு உரியமுறையில் போட்டியிட்ட தானே தலைவர் என்ற கட்டளையை வழங்குமாறும் வழக்காளி மாணிக்கவாசகர் இளம்பிறை பிராதில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு கடந்த புதன்கிழமை ஆதரிப்பதற்கான யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் எடுக்கப்பட்டது.
வழக்காளி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, கலாநிதி குமாரவேல் குருபரன், வழக்காளியில் கோரிக்கைகள் தொடர்பில் நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்ததுடன், வழக்கை முகத்தோற்றளவில் ஆராய்ந்து யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் மற்றும் செயலாளரை அந்தப் பதவியில் செயற்பட கட்டாணை வழங்குமாறு விண்ணப்பம் செய்தார்.
வழக்காளியின் விண்ணப்பத்தை ஆராய்ந்த மன்று, 14 நாள்களுக்கு கட்டாணையை வழங்கி எதிராளிகளுக்கு சேர்ப்பிக்க கட்டளையிட்டது. எதிராளிகள் தமது ஆட்சேபனையை முன்வைக்க வழக்கு ஜூலை 12ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.