ரியாஜ் பதியூதீன் விடுதலை; சிஐடி அதிகாரிகளை அழைத்துள்ளார் சட்ட மா அதிபர்

0

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் முதன்மை விசாரணை அதிகாரிக்கு சட்ட மா அதிபரால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரியாஜ் பதியூதீனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஆவணங்களுடன் சட்ட மா அதிபர் அலுவலகத்தில் நாளை முற்படுமாறு இருவருக்கும் அழைப்புக் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாது ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுடன் அரசு செய்துகொண்ட உடன்படிக்கையை அடுத்து அவரது சகோதரரான ரியாஜ் பதியூதீன் விடுதலை செய்யப்பட்டார் என்று எதிர்கட்சி குற்றஞ்சாட்டியது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் 100 பேரினால் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நேற்றுமுன்தினம் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.