பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் 46 இலங்கை அகதிகளை விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.
கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டத்துக்குப் புறம்பாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்களை கைது செய்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு டிசெம்பர் 2ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து மீன்பிடி இழுவை படகில் குறித்த இலங்கையர்கள் புறப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மீன்பிடி கப்பலின் பணியாளர்கள், இரண்டு பெண்கள், ஒரு குழந்தை மற்றும் 43 ஆண்கள் என 46 பேர் உள்ளனர்.
2022ஆம் ஆண்டு டிசெம்பர் 24 ஆம் திகதி பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டத்துக்குப் புறம்பாக நுழைய முற்பட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் 13 வயதுக்கும் 53 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த நபர்கள் குறித்த மேலதிக சட்ட நடவடிக்கைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய தெஹிவளையைச் சேர்ந்த ஆட்கடத்தல்காரர்கள் குழுவொன்று ஒவ்வொரு நபரிடமிருந்தும் 200,000 ரூபா தொடக்கம் 4.5 மில்லியன் ரூபா வரை அறவீடு செய்தமை தெரியவந்துள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
ரீயூனியன் தீவிற்கு மக்கள் சட்டத்துக்குப் புறம்பாக நுழைவதை பிரெஞ்ச் அரசு விரும்பவில்லை என்றும், அத்தகைய நபர்கள் அச்சத்தின் பேரில் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.