யாழ்ப்பாணம் மாவட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ரைட்ரோன் விளையாட்டுக் கழக அணியை வீழ்த்தி வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணி சம்பியனாகியது.
யாழ்ப்பாணம் மாவட்ட மட்டத்தில் (Division III) கழகங்களுக்கு இடையே நடத்திய மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களைக் கொண்ட வன்பந்து சுற்றுப்போட்டியில் லீக் மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்று ரைட்ரோன் விளையாட்டு கழக (Dryton Sports Clup) அணியும் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் விளையாட்டு கழக (Old Golds Sports Clup) அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகின.
நேற்றுமுன்தினம் (ஒக்டோபர் 28) யாழ்பபாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியில் இறுதிப்போட்டி இடம்பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ரைட்ரோன் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது.

ரைட்ரோன் அணி 47.2 ஓவர்களில் 157 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து சகல விக்கெட்டுக்களையுமிழந்தது.
அந்த அணி சார்பில் யூ.உதயசாந்த் 33 பந்துகளில் 38 ஓட்டங்களையும் ஏ.டிசாகரன் 30, எஸ்.ஆர்னிகன் 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
ஓல்ட் கோல்ட்ஸ் அணி சார்பில் பந்துவீச்சில் எஸ்.மதுசன் 22 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும் எஸ்.நிரோசன் 23 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும் வை.ஜிந்துசன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு 158 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஓல்ட் கோல்ட்ஸ் அணி 37.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரமிழந்து வெற்றி இலக்கை எட்டியது.
அந்த அணி சார்பில் எஸ். நிரோசன் 50 ஓட்டங்களையும் எஸ்.எம்.சண் 30, எஸ்.மதுசன் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ரைட்ரோன் அணி சார்பில் எம்.அபிராம், ஏ.கஜானன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
ஓல்ட் கோல்ட்ஸ் அணியின் வெற்றிக்கு சகலதுறையிலும் அசத்திய செல்வராஜ் நிரோசன் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சம்பியனான வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணி, வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களின் அணிகளுடன் மோதவுள்ளது.
