“வன்முறையைத் தவிர்ப்போம், போதையை ஒழிப்போம்” என உருவாக்கப்பட்ட அமைப்பு எங்கே?


“வன்முறையைத் தவிர்ப்போம், போதையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் வடகிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பு கடந்த ஆண்டு மே 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 9 மாதங்கள் கடந்த நிலையில் அதன் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதே கண்கூடு.

யாழ்ப்பாணம் உள்பட தமிழர் தாயகத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை – கடத்தல் மற்றும் வாள்வெட்டு வன்முறைகளை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் குறிப்பாக தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களால் இந்த அமைப்பு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள வைரவர் ஆலயத்துக்கு அருகாமையில் 2018ஆம் ஆண்டு மே 6ஆம் திகதி வடகிழக்கு சமூக நல்லிணக்கத்துக்கான அமைப்பின் ஆரம்ப நிகழ்வு பெருமெடுப்பில் நடத்தப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்ற அந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் முக்கிய தீர்மானங்களும் முன்வைக்கப்பட்டன.

வடகிழக்கு மக்களாகிய நாங்கள் வன்முறை வாழ்வு தராது என்றும் போதை வாழ்வை அழிக்கும் என்றும் அறிந்திருக்கின்றோம்.

அந்த அறிவார்ந்த நம்பிக்கையின் மீது எமது சமூக, சமய, கலாசார, பண்பாட்டு கட்டமைப்பையும் சந்ததியினரையும் எமது வாழ்வையும் மேம்படுத்த உறுதி பூணுகின்றோம்.

வன்முறையை, போதையை ஆதரிக்கும் எவரும் எமது மக்களின் மீதும் எமது எதிர்காலத்தின் மீதும்  எவ்வித அக்கறையும் அற்றவர்கள் என்றும் எமது அழிவிற்கு துணை நிற்பவர்கள் என்றும் நம்புகின்றோம்.

அனைத்து பெற்றோரும் தாம் போதை மற்றும்  வன்முறைகளில் இருந்து முற்றாக விலகியிருப்பதோடு தமது குழந்தைகள் இதுவிடயத்தில் ஈடுபாடு காட்டவில்லை என்பதை முழுமையாக உறுதிசெய்தல் அவசியமாகும்.

அவ்வாறு ஈடுபாடு காட்டுகின்ற பிள்ளைகளின் விடயத்தில் உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ளளும் அணுகுமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவது அவசியமாகும்.

அனைத்து மதங்களும் போதைக்கும் வன்முறைக்கும் எதிரானவை. மதத்தலைவர்களும், மதகுருமார்களும், வணக்கஸ்தலங்களும் போதைக்கும் வன்முறைகளுக்கும் எதிரான போதனைகள் வழிகாட்டல்கள், விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் முன்னரைவிடவும்  கூடுதல் முக்கியத்துவத்தோடு முன்னெடுத்தல் அவசியமாகும்.

போதைப்பொருள் பாவனையிலும், வன்முறைகளிலும் பரவலாக ஈடுபடுவோர் இளைஞர்கள் என்ற வகையில் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் இளைஞர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்தும் வன்முறைகளிலிருந்தும் மீட்டெடுப்பதற்கு சமூக மட்ட நிகழ்ச்சித் திட்டங்களில் எமது மக்களின் நலன்பேணும் அனைத்து சமூகமட்ட அமைப்புகளும் தொடராக உழைப்பதற்கு முன்வரல் வேண்டும்.

வன்முறைக்கும் போதைக்கும் எதிராக மத்திய அரசு, மாகாண அரசு, உள்ளூராட்சிகள் தற்போது காணப்படும் சட்டரீதியான பொறிமுறைகளினூடாக தமது  மன்றங்களின் சிறப்பு சட்டவரைவுகளினூடாகவும் நடவடிக்கை மேற்கொள்ள முன்வரல் அவசியமாகும்.

இந்த தீர்மானங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பிரதேசங்களிலும், பெற்றோர் மதத்தலைவர்கள்,சமூகத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் இணைந்து போதைக்கும் வன்முறைக்கும் எதிரான விழிப்புணர்வுகுழுக்களை அமைத்துச் செயற்பட வேண்டுமென்றும் இந்த செய்திட்ட நிகழ்வில் முன்மொழியப்பட்டது.

அத்துடன், போதை முற்றாக ஒழியும்வரை, வன்முறை  முற்றாக ஒழியும் வரை எமது பயணம் தொடரும் என்றும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உறுதிபூண்டனர்.

இந்த விழிப்புணர்வு செயற்திட்ட நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்கள் அஸ்மின் அயூப், கே.சயந்தன், சுகிர்தன்  யாழ்ப்பாண மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னொல்ட் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் பொது அமைப்புகள் இளைஞர்கள் பெண்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

எனினும் அந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதைத் தவிர அதன் தீர்மானங்களை நிறைவேற்றும் பணிகள் இடம்பெற்றதாக இல்லை. வடகிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துச் செல்லும் அதேவேளை, வன்முறைகளும் தலைதூக்கி நிற்கின்றன.

ஒரு அமைப்பை ஆரம்பித்து வைப்பது மட்டும் போதாது, அதனை முன்கொண்டு செல்வதும் அவசியம். அரசியலில் பலம் வாய்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அந்த அமைப்பை முழுமையாக முன்கொண்டு செல்வதற்கு தடையேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

வடகிழக்கு சமூக நல்லிணக்கத்துக்கான அமைப்பை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “எமது சமூகத்துக்கான ஆபத்து எங்களுக்குள்ளேயேதான் இருக்கின்றது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் எமது இளைஞர்களே. எனவே அதனை நாம்தான் தடுத்து நிறுத்தவேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஆனால் அவர் தனது கருத்தை செயல்வடிவமாக்குவதற்கு தவறிவிட்டார் என்றுதான் கூறவேண்டும். எமது சமூகத்தில் தோன்றியுள்ள இந்த அவல நிலையைத் தடுக்க எம்மால் முடியாதுள்ள போது பொலிஸார் கட்டுப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

நிர்வாக ரீதியாக எழுந்த பிரச்சினைகளால் திணைக்களத் தலைவர் ஒருவரால் வழங்கப்பட்ட இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல்  திமிர்காட்டும் உத்தியோகத்தர்களுக்கே இன்றைய அரசியல்வாதிகள் துணை நிற்கும் நிலை யாழ்ப்பாணத்தில் காணப்படுகிறது.

ஆசிரியர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here