வருங்காலத்தில் 24 மணி நேர மின்வெட்டு ஏற்படும் – மின்சார சபை தொழிற்சங்கம் எச்சரிக்கை

எதிர்வரும் காலங்களில் நாட்டில் 24 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என்று இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் எச்சரித்துள்ளது.

எதிர்காலத்தில் மின் தட்டுப்பாடு காரணமாக நாடு மூடப்பட நேரிடும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

மின்சாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகளை வழங்கத் தவறியதன் விளைவாகவே இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

நாடு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கடும் வறட்சியை எதிர்கொள்வதை இலங்கை மின்சார சபை அறிந்துள்ளது. எனினும் வறட்சிக்கு முகங்கொடுக்க இலங்கை மின்சார சபை தயாராக இல்லை.

மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைவாக இருக்கும். நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகின்றன.

நாட்டில் அதிக மழை பெய்து இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே கடந்துள்ள போதிலும், தற்போது நீர்த்தேக்கங்களில் சேறு சேகரிக்கப்பட்டதே தவிர, நீர் சேகரிக்கப்படவில்லை.

மின்வெட்டு ஏற்பட்டால் மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு மின் நிலையங்கள் இல்லை. இது ஒரு நெருக்கடியான சூழ்நிலை.

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு தொடர்பில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் – என்றார்.