வடமாகாணத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தீ விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாக ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல தீ விபத்துக்கள் வடக்கின் பல்வேறு பகுதிகளில் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ளன.
வவுனியா இரட்டைப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தென்னை நார் ஆலை ஒன்றில் சனிக்கிழமை (22) தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சிவில் பாதுகாப்புப் படையினர், பிரதேசவாசிகள் மற்றும் வவுனியா நகர சபையின் தீயணைப்புப் பிரிவினரின் கூட்டு முயற்சியால் தீ அணைக்கப்பட்டது.
இதேவேளை, வவுனியா நெடுங்குளத்தில் உள்ள காப்புக்காடு மற்றும் அதனை அண்மித்த வயல்வெளியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் வவுனியா நகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.
இந்த தீ விபத்தில் மின்கம்பிகள் மற்றும் மின்மாற்றி எரிந்து சேதமடைந்ததால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக வடக்கில் அதிகளவான தீப்பரவல்கள் பதிவாகியுள்ளன. பொலிஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பல சமயங்களில் வேண்டுமென்றே தீ கொளுத்தப்பட்டதாக கூறுகின்றனர்.
இது போன்ற தீ விபத்துகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொலிஸாரும் படையினரும் மாகாணத்தில் உள்ள மக்களை கேட்டுக் கொள்கின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டால், பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறும், அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது பிற தொடர்புடைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.