வலிகாமம் மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பெற்றோலை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து நாளை வியாழக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
இதுதொடர்பில் வலி. மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
அத்தியாவசிய சேவையாக நேற்று சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எமக்குரிய எரிபொருள் இதுவரை வழங்கப்படவில்லை. ஆகவே எம்மால் கடமைக்கு செல்ல இயலாத சூழல் உருவாகியுள்ளது.
நீண்ட தூரங்களிலிருந்து வரும் உத்தியோகத்தர்கள் உரிய நேரத்தில் பொருளாதார நெருக்கடிக்குள் மத்தியில் பொது போக்குவரத்தில் பிரயாணம் செய்து மக்களுக்கு சரியான நேரத்தில் பணியாற்றமுடியாதுள்ளது.
அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எமது உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட அவமானங்களை கண்டித்தும் மேலும் தற்போதைய நிலையில் கடமைக்கு செல்ல எமக்கு பெற்றோல் பெற்றுத்தரும் வரை வலிகாமம் மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் கடமைக்கு செல்கிறோம். ஆனால் உலக வங்கியின் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளிருந்து விலகியிருக்க முடிவெடுத்துள்ளோம்.
எனவே நாளை ஜூன் 30ஆம் திகதி வியாழக்கிழமையில் இருந்து தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். அலுவலக இடையூறுகளுக்கு மனம் வருந்துகின்றோம் – என்றுள்ளது.
