
வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபாரக்கற்கைகள் பீடத்தின் தொழில் சமூகத்தொடர்பு மையத்தின் ஊடாக வடக்கு-கிழக்கு இளையோர்களுக்கு தலைமைத்துவப்பயிற்சி வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஜக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிறுவனம் (UNDP) மற்றும் ஏனைய பங்காளர்களான சமூக அபிவிருத்தி நிறுவனங்களின் அனுசரனையுடன் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வானது துணைவேந்தர் பேராசிரியர் த. மங்களேஸ்வரன் தலைமையில், துணைவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வு வழமை போல் கலாச்சார ரீதியாக மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி வியாபாரக்கற்கைகள் பீட பீடாதிபதி கலாநிதி யோ.நந்தகோபன் தனது வரவேற்பு உரையில் வடக்கு- கிழக்கு இளையோர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியை மேற்கொள்ளுவதற்கு ஒன்பது பிரிவுகளாக இப்பயிற்சி வகுப்பானது 11.02.2023 இல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்தார்.
இவ்வாறான பயிற்சி வகுப்புகளின் முக்கியத்துவம் மற்றும் இதன் நிலைத்தன்மையை எவ்வாறு பேணலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் த. மங்களேஸ்வரன் தனது உரையில் இவ்வாறான பயிற்சி வகுப்புகள் ஏன் இளையோர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இப் பயிற்சி நெறியானது வடக்கு – கிழக்கு இளையோர்களை யுவதிகளை நல்வழிப்படுத்தி அவர்களுக்கான எதிர்காலத்தை கட்டியெழுப்ப உதவிபுரியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் திரேஸ்குமார் தனது உரையில் இவ் தலைமைத்துவ பயிற்சி வகுப்புகள் இளையோர்களை ஒரு அபிவிருத்தி பாதைக்கு வழிநடத்திச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.



அடுத்ததாக யாழ்பாண மாவட்ட செயலாளர் ஆ. சிவபாதசுந்தரம் தனது உரையில் அரச நிறுவனங்களில் மேலதிகமாக உள்ள மனித வளங்கள் வீணடிக்கப்படுவதாகவும் இவ்வாறான சவால்களை இது போன்ற பயிற்சி வகுப்புக்களில் எடுத்துரைத்து வருங்கால இளையோர்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.